அடுத்த மக்களவை தேர்தல் கொள்கை போராக இருக்கும் : அமித்ஷா பேச்சு

புதுடெல்லி: ‘‘அடுத்த மக்களவை தேர்தல் கொள்கைகளுக்கு இடையேயான போராக  இருக்கும்.’’ என பாஜ தேசிய கவுன்சில் கூட்டத்தில்  அமித்ஷா பேசினார். மக்களவை தேர்தலுக்கு பாஜ முழுவீச்சில் தயாராகி வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள், யுத்திகள் பற்றி விவாதிப்பதற்காக இக்கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம், ெடல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு, கட்சியின் தலைவர் அமித் ஷா தலைமை தாங்கினார். பிரதமர் மோடி, மூத்த தலைவர் அத்வானி மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் பங்கேற்றனர். மாநாட்டை தொடங்கி வைத்து பாஜ தலைவர் அமித்ஷா பேசியதாவது:
அடுத்த மக்களவை தேர்தலில் மெகா கூட்டணி அமைப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன. இந்த கூட்டணிக்கு தலைவர், கொள்கை, திட்டம் எதுவும் கிடையாது. தேசிய அளவிலும் செல்வாக்கு இல்லை. ஆட்சியை கைப்பற்றும் பேராசையில் இந்த கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.

ஆனால், பா.ஜ.வின் கொள்கை ஏழைகளின் வளர்ச்சியும், பண்புள்ள தேசியத்தை உருவாக்குவதுதான். இந்த மக்களவை தேர்தல் கொள்கைளுக்கு இடையேயான போராக இருக்கும். பாஜ.வில் உலகின் பிரபல தலைவர் மோடி உள்ளார். மோடியை தவிர வேறு யாராலும் வலுவான ஆட்சியை தர முடியாது. மோடியை தோற்கடிக்க இயலாது என எதிர்க்கட்சிகளுக்கு தெரியும். பல ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது போல், அரசியலின் மையக் கருவாக மோடி உருவெடுத்துள்ளார். இந்த முறையும் உத்தரப் பிரதேசத்தில் பாஜ அதிக இடங்களை கைப்பற்றும். பொதுப்பிரிவை சேர்ந்த ஏழைகளுக்கு கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து,  கோடிக்கணக்கான இளைஞர்களின் கனவை மோடி அரசு நிறைவேற்றியுள்ளது.அயோத்தியில் விரைவில் ராமர் கோயில் கட்ட பா.ஜ விரும்புகிறது. அதில், எந்த சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

காவிமயம்
எங்கும் காவிமயம்பாஜ தேசிய கவுன்சில் கூட்டத்தை முன்னிட்டு, டெல்லி ராம்லீலா மைதான பகுதி முழுவதும் காவிமயமாக காட்சியளித்தது. பாஜ தலைவர்களை வரவேற்கும் பேனர்கள், போஸ்டர்கள் ஏராளமாக வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு பல்வேறு மாநில உணவு வகைகள் பரிமாறப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவியேற்பு