தமிழக மக்களுக்கு துரோகம் செய்பவர்களுடன் கூட்டணி கிடையாது - மோடியின் அழைப்பை நிராகரித்தார் முதல்வர்

சென்னை: பாஜ கூட்டணியில் பழைய நண்பர்கள் இணைய வேண்டும் என்று பிரதமர் மோடி நேற்று முன்தினம் அதிமுகவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதல்வர் எடப்பாடி, `தமிழக மக்களுக்கு துரோகம் செய்யும் கட்சிகளுடன் கூட்டணி இல்லை’ என்று பேசி அவரது அழைப்பை நிராகரித்துள்ளார்.அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர் முன்னிலையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ், பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி சுமார் 1,400 பேர் அதிமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தை பிறந்தால் வழி பிறக்கும் என்று முன்னோர்கள் சொன்னார்கள், தை மாதம் பிறக்க இருக்கிறது, தைத் திருநாளை, தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். அத்தனை குடும்பங்களும் சிறப்பாக கொண்டாட வேண்டுமென்பதற்காகத்தான் இன்றைக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கியது அதிமுக அரசு தான், வேறு எந்த ஆட்சியிலும் கிடையாது. எதிர்க்கட்சிகள் எல்லாம் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்திகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  எங்களை பொறுத்தவரைக்கும், யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அவர்களைத் தான் நாங்கள் ஆதரிப்போம். தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் நினைப்பவர்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைந்தவர்களை வாழ்த்தி பேசினார். அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்றார். அமைச்சர் எம்.சி.சம்பத் நன்றி கூறினார். முதல்வரின் பேச்சால், பாஜ தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புது கும்மிடிப்பூண்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்