சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா திடீர் ராஜினாமா

புதுடெல்லி: சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அலோக் வர்மா, தனக்கு வழங்கப்பட்ட புதிய பதவியை ஏற்க மறுத்து விட்டார். மேலும், தனது பதவியையும் அவர் அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தினர். இதனால், இருவரையும் மத்திய அரசு கடந்த அக்டோபரில் கட்டாய விடுப்பில் அனுப்பியது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அலோக் வர்மா மனு செய்தார். இதை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது. இதையடுத்து, சிபிஐ இயக்குனராக அலோக் வர்மா கடந்த 9ம் தேதி மீண்டும் பொறுப்பேற்றார். ‘மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் (சிவிசி) அறிக்கை தாக்கல் செய்யும் வரை அவர் கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்கக் கூடாது, அலோக் வர்மாவுக்கு எதிராக நியமன குழுதான் நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் கூறியிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபிதி ஏ.கே.சிக்ரி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் அடங்கிய நியமன குழு, நேற்று முன்தினம் டெல்லியில் கூடியது. அதில், அலோக் வர்மா குறித்து சிவிசி தாக்கல் செய்த அறிக்கையில் 10 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதன் அடிப்படையில் அவரை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து நீக்க பிரதமர் மோடியும், நீதிபதி ஏ.கே.சிக்ரியும் முடிவு செய்தனர். மல்லிகார்ஜூன கார்கே மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், 2:1 என்ற பெருபான்மை ஆதரவு அடிப்படையில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டு, தீயணைப்புத் துறை மற்றும் ஊர்காவல் படை இயக்குனர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார்.

அலோக் வர்மா தனது பணியில் இருந்து கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஓய்வு பெற்றார். மத்திய அரசு அவரை சிபிஐ இயக்குனராக நியமித்ததால், அவருக்கு 2 ஆண்டுகள் பதவிக்காலம் கிடைத்தது. இந்த பதவிக்காலம் வரும் 31ம் தேதி வரை உள்ளது. இவர், ஏற்கனவே ஓய்வு வயதை கடந்தவர் என்பதால், வேறு துறைகளில் பணியாற்ற முடியாது என்ற சட்டச்சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், இந்த தீயணைப்பு துறை பதவியை ஏற்க விரும்பாத அவர், நேற்று தனது பதவியை திடீரெ ராஜினாமா செய்தார்.  
இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘எனக்கு எதிராக செயல்பட்ட நபர் அளித்த பொய்யான, ஆதாரமற்ற மற்றும் அற்ப குற்றச்சாட்டின் அடிப்படையில் உயர்நிலைக் குழு என்னை சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து மாற்றியது வருத்தம் அளிக்கிறது. எனவே, நான் அரசு பணியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். அரசு தனது முடிவை சிந்தித்து பார்க்கும் நேரம் இது. சிபிஐ அமைப்பின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். வெளிப்புற குறுக்கீடு இல்லாமல் அது செயல்பட வேண்டும். சிபிஐ அமைப்பை சிதைக்கும் முயற்சிகள் நடந்தபோதும், சிபிஐ அமைப்பு கட்டுகோப்புடன் செயல்பட முயற்சி எடுத்தேன்’’ என்றார்.

இணை இயக்குனர்கள் பணியிட மாற்றம்: அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட போது, சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகஸே–்வர ராவ் நியமிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மூன்று நாட்களுக்கு முன் சிபிஐ இயக்குனர் பதவியை மீண்டும் ஏற்ற அலோக் வர்மா, தான் பதவியில் இல்லாதபோது செய்யப்பட்ட அதிகாரிகள் இடமாற்றத்தை ரத்து செய்தார்.
இந்த பதவியை ஏற்ற 48 மணி நேரத்தில் அவருடைய பதவி பறிக்கப்பட்டதால், நாகேஸ்வர ராவ் மீண்டும் இடைக்கால இயக்குனர் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர், அலோக் வர்மாவால் ரத்து செய்யப்பட்ட  இடமாற்ற உத்தரவை ரத்து செய்து, அதிகாரிகளை பழைய இடங்களுக்கே மாற்றினார். மேலும் நாடு முழுவதும் 6 சிபிஐ இணை  இயக்குனர்கள் நேற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சென்னை மண்டல  சிபிஐ தலைவர் பிரவீன் சின்ஷா டெல்லி மண்டலத்திற்கு மாற்றம்  செய்யப்பட்டுள்ளார். சென்னை மாண்டலத்தின் புதிய தலைவராக அம்ருத் மோகன்  பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

கூண்டுக்கிளி

அலோக் வர்மா பதவி நீக்கம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், பிரபல வக்கீலுமான கபில் சிபில் கூறுகையில், ‘‘கூண்டு கிளி பறக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளது. அது சிறைப்பட்டுதான் கிடக்க முடியும். என்பதை உயர்நிலைக் குழு உறுதி செய்துள்ளது. அதிகார மட்டத்தில் நடக்கும் விஷயங்களை அலோக் வர்மா வெளியில் தெரிவித்து விடுவார் என்ற அச்சம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அஸ்தானா மீதான லஞ்ச வழக்கை ரத்து செய்ய மறுப்பு

சிபிஐ வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க சிபிஐ சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா, டிஎஸ்பி தேவேந்திர குமார், இடைத்தரகர் மனோஜ் பிரசாத் ஆகியோர் லஞ்சம் பெற்றனர் என ஐதராபாத் தொழிலதிபர் சதீஷ் பாபு சானா என்பவர் புகார் கூறியிருந்தார். இதன் அடிப்டையில் இவர்கள் மீது சிபிஐ எப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தது. இதை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அஸ்தானா வழக்கு தொடர்ந்தார். இதை நேற்று விசாரித்த நீதிபதி நஜ்மி வசிரி, இநத எப்ஐஆரை ரத்து செய்ய மறுத்து விட்டார். ராகேஸ் அஸ்தானாவுக்கு எதிரான விசாரணையை 10 வாரங்களுக்குள் சிபிஐ முடிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அஸ்தானா மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று நீக்கியது. இதனால், இந்த வழக்கில் அவரை சிபிஐ கைது செய்து விசாரிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED எஸ்எஸ்சி கேள்வித்தாள் கசிந்த விவகாரம் 3 பேரை கைது செய்தது சிபிஐ