நெல்லையில் தலைபொங்கல் சீர்வரிசை பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல் : போலீசார் தீவிர கண்காணிப்பு

நெல்லை : தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி தலை பொங்கல் சீர்வரிசைக்காக பித்தளை பாத்திரங்கள், காய்கறிகள், கரும்பு கட்டுகள் வாங்குவதற்கு நெல்லை டவுனில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் பாரம்பரிய திருநாளான தை பொங்கல் பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டிற்கான தை பொங்கள் பண்டிகை திருவிழா வரும் 15ம் தேதி நடக்கிறது. இதை கொண்டாட இன்னும் ஓரிரு தினங்களே உள்ளநிலையில் அதை வரவேற்க அனைவரும் ஆயத்தமாகி வருகின்றனர்.பொங்கல் பண்டிகையின் முதல் நாளன்று சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக வீட்டின் முன்பு புதிய மண் அடுப்பில் பனை ஓலையால் நெருப்பு மூட்டப்பட்டு, மண் பானை அல்லது பித்தளை பானையில் பச்சை அரிசி, நெய், முந்திரி, கிஸ் பழம் இட்டு சர்க்கரை பொங்கலும், மற்றொரு பானையில் பச்சை அரிசியால் பொங்கல் ேசாறும் தயார் செய்யப்படுகிறது. பின்பு சூரியனுக்கு அவற்றினையும், மஞ்சல் குலையும், கரும்பு கட்டும், காய்கறிகள் படைக்கப்பட்டு தீபாராதனை காட்டப்படுகிறது.

2வது நாள் மாட்டுப்பொங்கலும், 3ம் நாள் சிறுவர்களுக்கான சிறு வீட்டு பொங்கல், காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. மேலும் திருமணம் முடிந்த புதுமண தம்பதிக்கு தலை பொங்கல் கொண்டாடுவதற்காக மணப்பெண்ணின் வீட்டார் பெண்ணுக்கு சீர் வரிசையாக புதிய பெரிய குத்துவிளக்குகள் மற்றும் துணை விளக்குகள், புதிய பித்தளை பானைகள், சறுவ சட்டிகள், பித்தளை சிறிய, பெரிய அகப்பைகள், சில்வர் பாத்திரங்கள், வாழைத்தார்கள், பச்சை அரிசி, காய்கறிகள், பனங்கிழங்கு, பழங்கள், கரும்பு கட்டுகள் ஆகியவை வழங்கப்படுகிறது.
இதையொட்டி தலை பொங்கலுக்காக சீர்வரிசை வழங்குவதற்கு மணப்பெண் வீட்டாரும் உறவினர்களும் டவுன், பாளை உள்ளிட்ட பகுதிகளில் பொருட்களை வாங்குவதற்கு நேற்று முதல் குவிய துவங்கி விட்டனர். இதனால் அப்பகுதிகளில் கடைகளில் கூட்டம் அலை மோதுவதால் அங்கு போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இதில் பகல் நேரத்தை காட்டிலும் இரவு நேரத்தில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. மேலும் பொதுமக்களும் காய்கறிகள், கிழங்கு வகைகளை வாங்குவதற்கு குவிய துவங்கியுள்ளனர்.இதையடுத்து இரு எஸ்ஐக்கள் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குற்றப்பிரிவு போலீசார் சாதாரண உடையணிந்தும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். டவுன் ரதவீதிகளும் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காரிமங்கலம், கடத்தூரில் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்