15ம் தேதி பொங்கல் பண்டிகை குமரி மார்க்கெட்டுகளில் கரும்பு வரத்து அதிகரிப்பு

நாகர்கோவில் : பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்ட மார்க்கெட்டுகளில் கரும்பு, மஞ்சள் கொத்து, பனங்கிழங்குகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவுக்கு இன்னும் 3 நாட்களே இருப்பதால், பொங்கல் பண்டிகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. பழைய கழிதலும், புதியன புகுதலும் தான் போகி ஆகும். அதன்படி தற்போது வீடுகளில் வெள்ளை அடித்தல், பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்துதல் போன்றவற்றில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பொங்கல் பண்டிகைக்கு தேவையான பொருட்களும் சந்தைகளில் குவிந்து வருகின்றன. நாகர்கோவிலில் வடசேரி காய்கறி சந்தையில் பொங்கல் பொருட்கள் குவிந்து வருகின்றன. இதே போல் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் மற்றும் திங்கள்சந்தை, குளச்சல், மார்த்தாண்டம் பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் விற்பனைக்காக குவிந்து வருகின்றன. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக வந்துள்ளன. ஒரு கட்டு கரும்பு ரூ.400க்கு (15 எண்ணம்) விற்பனையாகி வருகிறது.

இந்த முறை கஜா புயல் காரணமாக திண்டுக்கல் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கரும்பு விளைச்சல் வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து பெரிய அளவில் இல்லை என்று வியாபாரிகள் கூறினர். கரும்பு சில்லறை விலையில் ஒரு கரும்பு ரூ.40-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. மஞ்சள் கொத்துக்களும் விற்பனைக்காக வந்து இருக்கின்றன. ரூ.35, ரூ.40 ஆக இவை உள்ளன. காய்கறிகளின் விலைகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. நேற்று முன் தினம் ரூ.50 இருந்த தக்காளி விலை இன்று, ரூ.5 அதிகரித்து ரூ.55 ஆக இருந்தது. வியாபாரிகள் கூறுகையில், இந்த ஆண்டு கஜா புயல் ஏற்பட்டதால் கரும்பு வரத்து குறைந்தது. மதுரை, விருதுநகர் போன்ற பகுதிகளில் இருந்தே அதிக அளவு கரும்பு கொண்டு வந்துள்ளன. இதனால் விலை அதிகரித்தது.  கடந்த ஆண்டு 200 லாரிகளில் வந்த கரும்பு, இந்த ஆண்டு பாதி அளவு கூட இல்லாத நிலை உள்ளது. இன்றும், நாளையும் வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

புகையில்லா  போகியாக கொண்டாடுவோம்

கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும்  என்ற அடிப்படையில் போகி பண்டிகையினை கொண்டாடி வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது போகி பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு இதனால் வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொதுமக்களுக்கு பாதிப்பும் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படுவதோடு விபத்துகளுக்கும் காரணமாக உள்ளது. எனவே, போகி பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சிவனடியார்கள் முடிவு பால்குட திருவிழா