பாலகிருஷ்ணரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த 1998ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகனூரில் கர்நாடக எல்லையில் கள்ளச்சாராயத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது பஸ்கள் மீது கல்வீசி தாக்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 108 பேரில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது.

மேலும் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து சிறப்பு நீதிமன்றத்தில் விதித்த 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பு வந்ததும் அமைச்சர் பதவியை பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்துள்ளார் என்றும், தீர்ப்புக்கு தடை விதிக்க பரிசீலிக்க வேண்டும் என்றும் ரெட்டி தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். முதல் தகவல் அறிக்கையில் பாலகிருஷ்ணரெட்டி பெயர் இல்லை என்றும் கூட்டமாக செய்தார்கள் என்றே குற்றச்சாட்டு,பாலகிருஷ்ணரெட்டி மீதுதனிப்பட்ட புகார் இல்லை என்றும் அரசு தரப்பு வாதிட்டது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு தவறு என்கிறீர்களா? என்று பாலகிருஷ்ண ரெட்டிக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். சிறப்பு நீதிமன்றம் விதித்த உத்தரவு சரியானது தான் என்றும், அதற்கு ஏன் தடை விதிக்க வேண்டும் என கேள்வி நீதிபதி கேள்வி எழுப்பினார். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைச்சர் இருக்க வேண்டும் என நீதிபதி பார்த்திபன் கருத்து தெரிவித்தார். இதனையடுத்து  பாலகிருஷ்ண ரெட்டிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED குரூப் 1 தேர்வை ரத்து செய்யக்கோரிய...