வல்லூர் அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை எண்ணூர் பகுதியில் கொட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை : வல்லூர் அனல்மின் நிலைய நிலக்கரி சாம்பலை எண்ணூர் பகுதியில் கொட்ட விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வழக்கின் பின்னணி


சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து வல்லூர் அனல்மின் நிலையம் மூடப்பட்டது. மத்திய அரசின் விதிகளை மீறி சதுப்பு நில பகுதிகளில் வல்லூர் அனல்மின் நிலையம் நிலக்கரி சாம்பலை கொட்டி வந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சரவணன் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் எண்ணூரில் சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்ட வல்லூர் அனல் மின்நிலையத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

விதிகளை பின்பற்றாமல், சுற்றுச்சூழலுக்கும், சுகாதாரத்திற்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அனல்மின் நிலையம் செயல்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் வல்லூர் அனல்மின் நிலையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதி 2018 மார்ச்சுடன் முடிவடைந்தது என்றும், மத்திய அரசு அளித்த அனுமதியை புதுபிக்காமல் அனல்மின் நிலையம் தொடர்ந்து செயல்படுவவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

வல்லூர் அனல்மின் நிலையம் மூடல்

இதனால் வல்லூர் அனல்மின் நிலையத்தை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வல்லூர் அனல்மின் நிலையத்தில் 3 அலகுகளிலும் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்று அனல்மின் நிலைய நிர்வாகம் தெரிவித்தது.

உயர்நீதிமன்றம் மறுப்பு

இந்நிலையில் எண்ணூரில் உள்ள சதுப்பு நில பகுதிகளில் நிலக்கரி சாம்பலை கொட்டக் கூடாது என, வல்லூர் அனல் மின் நிலையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. முன்னதாக உயர்நீதிமன்றம் தடை விதித்ததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. மூடப்பட்ட வல்லூர் அனல் மின் நிலையத்தை திறக்க 18ம் தேதி வரை தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது  இதையடுத்து அனல்மின் நிலையத்தை திறக்கலாமா வேண்டாமா என்று 18ம் தேதிக்குள் தெரிவிக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் கெடு வழங்கியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கக்...