ரூ.1000 பொங்கல் பரிசு விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

சென்னை: பொங்கல் பரிசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. முன்னதாக சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்(NPHH-S) ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு ரூ 1000 வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தமிழக அரசு முறையீடு செய்தது.

வழக்கு கடந்து வந்த பாதை

அரிசி தவிர்த்து சர்க்கரை வாங்கும் பிரிவு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குமாறு உத்தரவிடக்கோரிய அரசின் முறையீட்டை அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.  பொங்கல் பண்டிகைக்காக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா 1000 மற்றும்  பொங்கல் பொருட்களை வழங்க அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், அரசின் இந்த இலவச பரிசு உத்தரவை எதிர்த்து கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர், வசதி படைத்தவர்களுக்கு பொங்கல் பரிசு 1000 வழங்க தடை விதித்து நேற்று முன்தினம் உத்தவிட்டனர்.

தமிழக அரசு முறையீடு

அதன்படி மொத்தமுள்ள குடும்ப அட்டைதாரர்களில் சுமார் 10 லட்சம் பேர் பொங்கல் பரிசு பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு தமிழக அரசு தரப்பு  வக்கீல்மனோகரன் பொங்கல் பரிசு தடைக்கு எதிராக முறையிட்டார். நீதிபதிகளிடம், அரிசி தவிர சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்குபவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்கிறோம். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் கோரினார்.

அதற்கு நீதிபதிகள் அவசர வழக்காக இன்றோ, நாளையோ விசாரிக்க முடியாது. மனுத் தாக்கல் செய்தால் வழக்கமான பட்டியலின்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றனர். இதையடுத்து, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க உத்தரவிடக்கோரி நேற்று மாலை அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சர்க்கரை மட்டும் வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும்(NPHH-S) ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர் .தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கில்  உத்தரவிட்ட நீதிமன்றம், இலவசங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என்ற முடிவு எடுக்குமாறு தமிழக அரசுக்கு அறிவுரை வழங்கியது. எனினும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

அதன்படி எத்தனை காலங்களுக்கு இலவசங்கள் வழங்குவீர்கள் ? ஒரு நாளைக்கு ரூ500 சம்பாதிக்க முடியும் என்ற நிலையில், நியாய விலைக்கடைகளில் வழங்கும் அரிசிக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்காமால் இலவசமாக வழங்குவது ஏன்? இந்த ஆண்டு மற்றும் பொங்கல் பரிசாக ரூ. 1000 கொடுக்கப்பட்டது ஏன் ? அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில் பொங்கல் பரிசை அதில் செலுத்துவதை விடுத்து 8 முதல் 10 மணிநேரம் காக்க வைக்க வேண்டிய அவசியம் என்ன? இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்கள் வழங்கப்படும்? என்றும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து இந்த வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்


பொங்கல் பரிசு குறித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. சர்க்கரை அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க உயர்நீதிமன்றம் அனுமதி தந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. பொங்கல் பரிசுக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், தங்களது தரப்பு கருத்தையும் பதிலையும் கேட்காமல் எந்த ஒரு தடை உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று தமிழக அரசு மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆவடி மாநகராட்சிக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு