ரஞ்சி கோப்பை தமிழகம் - டெல்லி டிரா

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடு - டெல்லி அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து முதல் இன்னிங்சில் 432 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய டெல்லி அணி நிதானமாக ரன்களை சேர்க்க ஆரம்பித்தது. நேற்று முன்தினம் 3ம் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 268 ரன்கள் எடுத்தது. ஜான்டி சித்து 104 ரன்களுடனும், லலித் யாதவ் 65  ரன்களுடன் களத்தில் இருந்தன.இந்நிலையில் கடைசிநாளான நேற்றும் டெல்லி நிதான ஆட்டத்தையே கடைப்பிடித்தது. அதனால் ஜான்டி சித்து-லலித் யாதவ் ஜோடியை பிரிக்க முடியாமல் தமிழக பந்து வீச்சாளர்கள் தடுமாறினர்.
அணியின் ஸ்கோர் 312 ஆக இருந்தபோது சாய்கிஷோர் வீசிய பந்தை லலித் யாதவ் தூக்கி அடித்தார். ஆனால் சப்ஸ்டியூட்டாக வந்த கவுசிக் சரியாக கேட்ச் பிடிக்க லலித் யாதவ் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 7வது  விக்கெட்டுக்கு 170 ன்கள் குவித்தது.
அடுத்து வந்த சுபோத் பஹாடி, விகேஷ் மிஸ்ரா டக் அவுட் ஆகினர். நவதீப் சாய்னி ஒரு ரன்னில் அவுட்டாக இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. டெல்லி அணி 133.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 336 ரன்கள் எடுத்தது.  ஜான்டி சித்து 140 ரன்களுடன் அவுட்டாகமல் களத்தில் நின்றார்.

தமிழக வீரர்களில் சாய்கிஷோர் 43.1ஓவர்கள் வீசி 90 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். எம்.முகம்மது, பாபா அபரஜித், மோகன் பிரசாத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.தமிழ்நாடு தனது 2வது இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பாபா அபரஜித் 33 ரன்கள் எடுத்து அவுட்டானார். ஆட்ட நேர முடிவில் தமிழ்நாடு ஒரு விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் எடுத்தது ஜெகதீசன் 59  ரன்களுடனும், ரஞ்சன்பால் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் லலித் யாதவ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.தமிழ்நாடு- டெல்லி இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த 2 அணிகளும் காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை ஏற்கனவே இழந்து விட்டன.

புதுச்சேரி - நாகலாந்து ஆட்டம் டிரா
நாகலாந்து மாநிலம் திமாபூரில் ரஞ்சி கோப்பை லீக் சுற்றில் புதுச்சேரி - நாகலாந்து அணிகள் மோதின. முதலில் விளையாடிய நாகலாந்து முதல் இன்னிங்சில் 467ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து விளையாடிய புதுச்சேரி அணி  286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனையடுத்து 2வது இன்னிங்சை விளையாடிய நாகலாந்து 6 விக்கெட்கள் இழப்புக்கு 222ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. தொடர்ந்து 2வது இன்னிங்சை விளையாடிய புதுச்சேரி ஆட்டத்தின் கடைசி  நாளான நேற்று ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 208ரன்கள் எடுத்திருந்தது. அதனையடுத்து 2 அணிகளும் மோதியப் போட்டி டிராவில் முடிந்தது.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகத்தில் நிலவும் பரபரப்பான...