×

போதிய நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க மறுக்கிறது: தமிழக அரசு குற்றச்சாட்டு

மதுரை: மாநில பேரிடர் நிவாரண நிதியில் போதிய நிதி இருந்தும் கஜா புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க மறுப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கஜா புயல் நிவாரணம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது இந்த குற்றசாட்டை தமிழக அரசு முன்வைத்துள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனே நிவாரண நிதியை வழங்க வலியுறுத்தி பேராவூரணியை சேர்ந்த முருகேசன், மதுரையை சேர்ந்த ஸ்டாலின், திருமுருகன், தங்கவேல் மற்றும் எழிலன் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கை தொடர்ந்துள்ளனர். அந்த வழக்குகள் மீதான விசாரணை நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. அப்போது புயல் நிவாரண நிதியை வழங்காமல் தாமதப்படுத்த மத்திய அரசு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவதாக தமிழக அரசு வழக்கறிஞர் புகார் தெரிவித்துள்ளார்.  புயல் சேதம் குறித்து நேரில் விளக்கம் அளிக்க தமிழக அதிகாரிகள் டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் போதிய நிதி இருந்தும் கொடுக்க மறுப்பதாகவும் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனிடையே இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நிவாரண தொகை தர முடியும் என்றும், இறுதி அறிக்கையை தயாரிக்கவே தமிழகத்திடம் சந்தேகத்தை கேட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது. மேலும் கஜா புயல் தொடர்பான மத்தியகுழு நாளை அல்லது விரைவில் இறுதி அறிக்கையை துணைக்குழுவிடம் தாக்கல் செய்யும் என மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அறிக்கையை தாக்கல் செய்த பிறகு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இடைக்கால நிதியாக 3,70 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளதாகவும், மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் தமிழகத்திற்கு 1000 கோடி மேல் இருந்தும் கஜா புயல் பாதிப்பிற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் தமிழகம் குற்றம் சாட்டியது. இந்த விளக்கத்தை கேட்ட நீதிபதிகள் தமிழக அரசு அளித்த இந்த விளக்கங்கள் போதுமானதா? என்றும், இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும்? என்றும், நிவாரணம் எப்போது கிடைக்கும்? போன்ற தகவல்களை மத்திய குழுவிடம் கேட்டு நாளைக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : state government ,storm ,Ghazi , Gajah Storm,Relief Fund,Central Government,Tamilnadu Government
× RELATED முத்திரைத்தாள் வரி வசூலிப்பது என்பது...