×

மின் உற்பத்திக்காக தினமும் தண்ணீர் எடுப்பதால் பைக்காரா அணை நீர்மட்டம் குறைகிறது

ஊட்டி: மின் உற்பத்திக்காக தினமும் பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படும் நிலையில், அணையின் கொள்ளளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. நீலகிரி மாவட்டத்தில் குந்தா மின் வாரியத்திற்குட்பட்ட அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பார்சன்ஸ்வேலி, போர்த்திமந்து, பைக்காரா போன்ற பகுதகிளில் அணைகள் உள்ளன. இந்த அணையில் தேக்கி வைக்கப்படும் நீரை கொண்டு குந்தா, அவலாஞ்சி, கெத்த, பரளி, பில்லூர் டேம், காட்குப்பை, சிங்காரா மற்றும் மாயர் போன்ற நிர் மின் நிலையங்களின் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டும், 800 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டு தோறும் தென் மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ மழையின் போது இந்த அணைகளின் தண்ணீர் அளவு உயரும்.

சில சமயங்களில் நிரம்பி வழியும். இம்முறை ஜூன் மாதம் துவங்கிய தென் மேற்கு பருவமழை 4 மாதங்களுக்கு மேல் பெய்தது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழையும் தலைகாட்டியது. இதனால், அனைத்து அணைகளும் நிரம்பியே காணப்படுகிறது. பைக்காரா அணையும் கடந்த ஜூன் மாதம் பெய்த மழையால் நிரம்பி வழிந்தது. இந்நிலையில், சிங்காரா புதிய மற்றும் பழைய மின் நிலையம் தற்போது நாள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இதற்காக, நாள் தோறும் அணையில் இருந்து தண்ணீர் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால், பைக்காரா அணையில் நாளுக்கு நாள் தண்ணீர் அளவு குறைந்துக் கொண்டே செல்கிறது. இந்த அணையில் சுற்றுலாத்துறை சார்பில் படகு சவாரி மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீர் அளவு குறைய குறைய, சுற்றுலா பயணிகள் தாழ்வான பகுதியில் படிக்கெட்டில் இறங்கி செல்கின்றனர். தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்த அணையில் இருந்து மின் உற்பத்திக்காக தண்ணீர் எடுத்தால், கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதாள பள்ளத்திற்கு தண்ணீர் அளவு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், படகு சவாரி செய்பவர்கள் 100 படிகளுக்கு மேல் இறங்கியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pykara Dam , Power generation, water, pykara dam
× RELATED மின் உற்பத்திக்காக தினமும் தண்ணீர்...