×

புறம்போக்கு நிலத்தில் பட்டா என வதந்தி : பவானி அருகே மலையை ஆக்கிரமித்த மக்கள்

பவானி: பவானி அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து வசித்தால் பட்டா வழங்கப்படும் என்று வதந்தி பரவியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மலைப்பகுதியில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த நல்லகவுண்டன்பாளையத்தில் உள்ள பச்சைபாளி சாணார்மேடு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதி சமதளமாகவும், ஆங்காங்கே மலைக்குன்றுகளும்,பாறைகளும் நிறைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.

இந்நிலையில்,  குடிசை மாற்று வாரியத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம் போக மீதமுள்ள நிலத்தில் வீடற்றவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்படுவதாக நேற்று வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தபொதுமக்கள் கார், வேன் மற்றும் இருசக்கர வாகனம் மூலம் இப்பகுதிக்கு வந்து காலியிடங்களில் கயிறு கட்டியும்,கல்நட்டியும் ஆக்கிரமித்தனர். மேலும்,இங்கு குடிசை அமைத்து வசித்தால் அரசு சார்பில் வீட்டுமனை பட்டா வழங்கப்படும் எனவும் வதந்தி பரவியது. இதனால், கும்பல் கும்பலாக இப்பகுதியில் குவிந்தனர்.  மேலும், பலர் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து தாங்கள் ஆக்கிரமித்த நிலத்தை சமன்படுத்தி குடிசை அமைத்தனர். கூட்டம் அதிகரித்ததால் சமதள பகுதிகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு, அடுத்த கட்டமாக பாறைகள் நிறைந்த பகுதியும், மலைக் குன்றுகளும் ஆக்கிரமிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து இப்பகுதியில் திடீர் கடைகளும் முளைக்க தொடங்கின. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சித்தோடு எஸ்ஐ சத்தியசீலன் மற்றும் போலீசார் பொதுமக்களிடம் புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்குநேற்று மாலை  வந்த ஈரோடு தாலுகா மண்டல துணை தாசில்தார் சண்முகசுந்தரம், ஈரோடு வடக்கு வருவாய் ஆய்வாளர் உமா மகேஸ்வரி மற்றும் போலீசார் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டிருந்த பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு புறம்போக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தற்போது முதல் கட்டமாக குடிசை மாற்று வாரியத்தில் 29 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது.

காவல்துறை சார்பில் கனவு இல்லம்,மாவட்ட விளையாட்டு துறை சார்பில் விளையாட்டு மைதானம், குற்றவியல் நடுவர் மன்ற ஊழியர்களுக்கு குடியிருப்பு கட்டவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதற்காக நிலம் ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ள பொதுமக்களுக்கு எவ்வகையிலும் வீட்டுமனை பட்டா வழங்கும் வாய்ப்பு கிடையாது. வீடற்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு மட்டுமே ஒதுக்கித் தர முடியும். எனவே ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாகவே அரசு நிலத்தை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் இப்பகுதியில் முகாமிட்டிருந்த பொதுமக்கள் களைய தொடங்கினர். மேலும் பலர் தாங்கள் அமைத்திருந்த பொருட்களை வாகனங்களில் ஏற்றி சென்றனர். யாரோ சிலர் பரப்பிய வதந்தியால் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கிடைக்கும் என ஆக்கிரமிப்பு செய்தவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hill ,Bhavani , Patta, Bhavani, mountain, people
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...