×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு : அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜராகி விளக்கம்

புதுடெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார். ப.சிதம்பரம் மத்திய நிதி மந்திரியாக இருந்தபோது ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாகவும், இதற்கு ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு பெருந்தொகை லஞ்சமாக தரப்பட்டது என்று புகார் எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கொடைக்கானல், உதகை, டெல்லி ஆகிய நகரங்களிலும், பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளிலும் சிதம்பரம் குடும்பத்துக்குச் சொந்தமான சுமார் 54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கெனவே அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி ப.சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ப.சிதம்பரம் ஆஜரானார். அப்போது அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ப.சிதம்பரம் விளக்கம் அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ஏற்கனவே இடைக்கால தடை விதித்துள்ளது. தற்போது இந்த தடையானது ஜனவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ப.சிதம்பரத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை ஜனவரி 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : P. Chidambaram ,Department of Implementation , INX Media,Enforcement,P. Chidambaram,Karthi Chidambaram
× RELATED பாஜக தேர்தல் அறிக்கையில் புதிய அறிவிப்புகள் இல்லை: ப.சிதம்பரம் பேட்டி