×

சார்பதிவாளர், வணிகவரி அலுவலர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை; உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி சார்பதிவாளர் மற்றும் வணிகவரி அலுவலர் நியமனத்தில் இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு: தமிழக அரசுத்துறைகளில் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர், 2-ம் நிலை சார்பதிவாளர் ஆகிய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமிக்கப்படும்போது இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசுத்துறை நியமனங்களில் சமூக நீதியை உறுதி செய்ய இத்தீர்ப்பு உதவும். உதவியாளர் நிலையில் இருப்பவர்கள் துணை வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர்களாக நியமிக்கப்படும்போது, அவர்களுக்கு கூடுதல் ஊதியம், கூடுதல் பொறுப்புகள் வழங்கப்படும். இந்த நடைமுறையில் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இத்துறைகளின் மூத்த அதிகாரிகள் சிலர், உதவியாளர்கள் அடுத்த நிலை பதவியில் நியமிக்கப்படுவதை பதவி உயர்வாகத் தான் பார்க்க வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு கூடாது என்பதால், இப்பணிகளுக்கு இட ஒதுக்கீடு கூடாது என்று கூறினார்கள். இதே காரணத்தை முன்வைத்து அவர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்,  ஒரு நிலையில் உள்ள அதிகாரிகள், அதிக ஊதியமும், கூடுதல் பொறுப்பும் கொண்ட அடுத்த நிலை  பணிகளில் நியமிக்கப்பட்டால் அதை பதவி உயர்வாகவே கருத வேண்டும் என்று தீர்ப்பளித்தது. அதனால் இத்தகைய பணிகளுக்கு மாறுதல் மூலம் நியமனம் செய்வதில் வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு கடந்த 2005 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டில் தான் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணி நியமனங்களில் கடந்த 14 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்டு வந்த அநீதி களையப்பட்டிருக்கிறது.

பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கான விதிகளின்படி தான் மேற்கொள்ளப்பட வேண்டும். பதிவு சார்நிலைப் பணி விதிகள், தமிழ்நாடு வருவாய் சார்நிலைப் பணிகள், தமிழ்நாடு வணிகவரி சார்நிலைப் பணி விதிகள் ஆகியவற்றின்படி வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணிகள் பதவி உயர்வின் மூலமாகவோ, இட மாற்றத்தின்  மூலமாகவோ இல்லாமல் மாறுதல் மூலமான  நியமனம் என்ற புதிய விதியின் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதை பதவி உயர்வாகக் கருதாமல், புதிய நியமனமாகவே கருத வேண்டும் என்பது தான் பாமக மற்றும் சார்நிலைப் பணியாளர்களின்  கருத்தாகும்.

இவ்விகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியாகி இன்றுடன் 100 நாட்கள் ஆகும் நிலையில், இன்னும் நடைமுறைப்படுத்தப்படாதது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட அரசுத்துறை ஊழியர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதைப் போக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.எனவே, இனியும் தாமதிக்காமல் வட்டாட்சியர், உதவி வணிகவரி அலுவலர் மற்றும் சார்பதிவாளர் பணிகளுக்கு மாறுதன் மூலம் நியமனம் செய்யும் போதும் இட ஒதுக்கீட்டப்  பின்பற்ற வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.





பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ambassador ,Commercial Tax Officer , Supreme Court Judge, Subsidiary, Commercial Tax Officer, Appointment, Ramadoss
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...