×

வலைதளங்களின் செய்தியை வைத்து தான் பேட்டி அளித்தேன் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை: முன்னாள் அமைச்சர் பொன்னையன் திடீர் பல்டி

சென்னை: சமூக வலைதளங்களில் வெளியான செய்தியை வைத்து தான் பேட்டி அளித்தேன். ஜெயலலிதா மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் வாக்குமூலம் அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் ஜெயலலிதா மரணத்தில் தொடர்ந்து சந்தேகம் எழுப்பி வந்த முன்னாள் அமைச்சர் பொன்னையன், நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ஆஜரானார். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவரிடம் 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி, போயஸ் கார்டனில் ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டாரா? ஜெயலலிதாவுக்கு மெல்ல கொல்லும் விஷம் கொடுத்து, கொலை செய்யப்பட்டார் என்று கூறி வருகிறீர்களே அதற்கு ஆதாரம் இருக்கிறதா. ஜெயலலிதா கன்னத்தில் ஆணிக்கட்டைகளால் அடித்ததால் தான், 3 புள்ளிகள் ஏற்பட்டது என்று கூறியுள்ளீர்களே அதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்பது உள்பட பல்வேறு கேள்விகளை நீதிபதி ஆறுமுகச்சாமி எழுப்பினார். அப்போது முன்னாள் அமைச்சர் பொன்னையன் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து பேட்டி கொடுத்தேன். அதைத்தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு மருந்து அதிக அளவில் கொடுக்கப்பட்டதால் தான் அவர் உடல்நிலையில் கடும் பாதிக்கப்பட்டதாக டாக்டர் ஒருவர் அளித்த பேட்டியை குறிப்பிட்டு தான் நானும் சந்தேகம் எழுப்பினேன் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் பொன்னையனிடம், ‘ஆணி கட்டையால் ஜெயலலிதா கன்னத்தில் அடித்தார்கள், ஜெயலலிதா கால் வெட்டி எடுக்கப்பட்டது என்று எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு அவர் எனக்கு ஞாபகம் இல்லை என்றார். இது போன்று பல கேள்விகளுக்கும் ஞாபகம் இல்லை. தெரியாது என்றே பதில் அளித்தார். இதனால், ஆணைய நீதிபதி எந்த அடிப்படையில் நீங்கள் ஜெயலலிதா மரணம் தொடர்பாக சந்தேகம் எழுப்பினீர்கள் என்று கேட்டதற்கு, எனக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும், பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை வைத்து சந்தேகம், அந்த அடிப்படையில் தான் நான் பேட்டி கொடுத்ததாக கூறினார்.

இந்த விசாரணைக்கு பிறகு முன்னாள் அமைச்சர் பொன்னையன் நிருபர்களிடம் கூறுகையில், ஆணையத்தில் சில ஆதாரங்களை கொடுத்துள்ளேன். சட்ட விதிகளுக்கு உட்பட்டு ஆணையம் சசிகலாவிடம் விசாரணை நடத்த வேண்டும்’ என்றார். சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறுகையில், பொன்னையன் தன்னிடம் இருக்கும் ஆவணங்களை 123 பக்கங்களை புத்தகமாக கொடுத்துள்ளார். அவை அனைத்தும் பத்திரிகைகள், சமூக வலைதளங்களில் வெளிவந்த செய்தி தான்.  இந்த சந்தேகத்திற்கு சசிகலாவும், டிடிவி.தினகரனும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பேட்டியின் போது தெரிவித்ததாக பொன்னையன் கூறினார்.

போயஸ் கார்டனில் உள்ள பாதாள அறையில் உள்ள ெசாத்துக்களை எடுப்பதற்காக ஜெயலலிதாவின் கால்களை வெட்டி எடுத்தார்கள் என ஏன் பேசினீர்கள் என்று கேட்டதற்கு, அது குறித்து நான் பேசியதாக ஞாபகம் இல்லை என பொன்னையன் கூறினார். மேலும், அவர் சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களை வைத்து தான் நான் தெரிவித்தேன். பல சந்தேகங்களுக்கு தெளிவான நிலை வர வேண்டும் என்று தான் நான் கூறினேன் என்று கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.

ஓபிஎஸ், விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை
ஜெயலலிதா மர்ம மரணம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்துவதற்காக நேற்று ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனிப்பட்ட காரணத்திற்காக நேற்று ஆணையத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். மேலும், மற்றொரு நாள் ஒதுக்குமாறும் ஆணையத்திடம் கேட்டு கொண்டுள்ளார். அதே போன்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆணையத்தில் ஆஜராக விலக்கு கேட்டு நேற்று முன்தினம் கடிதம் அளித்துள்ளார். எனவே இரண்டு பேருக்கும் அடுத்து வரும் நாட்களில் நேரம் ஒதுக்கப்படும் என்று ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death ,Jayalalithaa ,Ex-Minister Poonayan , news,web site,Jayalalithaa,death,doubt,former Minister ponnaiyan,
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...