×

ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி வாய் பிளக்க வைத்த தமிழக இன்ஜினியர்!

ஐபிஎல் 12வது சீசனுக்கான வீரர்கள் ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தியை 4 கோடிக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி (27) ஒரு கட்டடக்கலை பொறியாளர். 13வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கி சிறப்பாக செயல்பட்ட நிலையில், +2 வந்ததும் மொத்தமாக மூட்டைகட்ட வேண்டியதாகிவிட்டது. தொடர்ந்து ஆர்க்கிடெக்ட் படிப்பு ஆக்கிரமித்துக் கொள்ள,  6 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியவில்லை. படிப்பு முடிந்ததும்  கிரிக்கெட் ஆர்வம் காரணமாக பகுதிநேர வேலை செய்தபடி மீண்டும் பயிற்சி பெற ஆரம்பித்தார்.   திறமை இருந்தும் வயது காரணமாக  அணிகளிலும், கிளப்களிலும் இடம் பிடிப்பது பிரச்னையாக இருந்துள்ளது.

முழங்கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக 6 மாதம் கிரிக்கெட் பக்கமே தலைகாட்ட முடியவில்லை. பின்னர் கடுமையாக முயிற்சி செய்து பல்வேறு கிளப்களுக்காக விளையாடியுள்ளார். திக்கு தெரியாமல் போய்க்கொண்டிருந்த நிலையில்,  டிஎன்பிஎல் டி20 புதிய கதவை திறக்க... 3 வது சீசனில் மதுரை அணிக்காக விளையாட வாய்ப்பு கிடைத்தது. முதல் 2 சீசன்களில் ஒரு வெற்றியை கூட பெறாத மதுரை அணி 3வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்றது. அதற்கு வருண் சக்கரவர்த்தியின் பங்களிப்பும் ஒரு காரணம்.  முதலில் பேட்ஸ்மேனாகதான் அந்த அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் பவுலராக பரிமளித்தார்.   அதனால்  பிசிசிஐ-ன் ஏ பிரிவு ஆட்டங்களில் தமிழக அணிக்காக விளையாடும் வாயப்பு கிடைத்தது. கடந்த செப்டம்பரில் தொடங்கிய விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் குஜராத், சர்வீசஸ், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், பெங்கால், அசாம், திரிபுரா, ஜம்பு காஷ்மீர், அரியானா அணிகளுக்கு எதிராக விளையாடி 22 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதன் பலனாக, நவம்பரில் முதல் முறையாக  முதல்தர போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.  ஐதராபாத் அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை   போட்டியில் தமிழக அணிக்காக ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஒரே ஒரு முதல்தர போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள வருணுக்கு,  ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையாக 20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி 8.4கோடிக்கு வாங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி வலைப்பயிற்சி பெற்றபோது வருண் பந்து வீசியுள்ளார். சென்னை அணியின் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டதால் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், கொல்கத்தா அணி பயிற்சி பெற்றபோது வருணை அழைத்து பந்துவீச வைத்தது.

இதற்கு அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்ல  சென்னை அணிக்கு பயிற்சி அளித்த மைக் ஹசியும்,  டிஎன்பிஎல் போட்டியில் வருணின் திறமையை மெச்சியதும்  ஐபிஎல் அணிகளின் கவனஈர்ப்புக்கு முக்கிய காரணம். இதனாலேயே ஏலத்தில் வருணின் விலை எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,auction , IPL, Tamilnadu Engineer, chakkaravarthy
× RELATED கோலாகலமாக தொடங்கியது ஐபிஎல் திருவிழா