×

அடிப்படை வசதிகள் புறக்கணிப்பு திருத்தங்கல் நகராட்சியில் ஆதிதிராவிட மக்கள் அவதி

சிவகாசி: திருத்தங்கல் நகராட்சியில் ஆதிதிராவிடர் மக்கள் அதிகம் வசிக்கும் 5வது வார்டு அடிப்படை வசதிகள் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சிவகாசி அருகே திருத்தங்கல் நகராட்சி 5வது வார்டில் முருகன் காலனி, தேவராஜ் காலனி, திருவள்ளுவர் காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பட்டாசு தொழில் செய்து வருகின்றனர். கடம்பன்குளம் கண்மாய், பாப்பன் குளம் கண்மாயை இணைக்கும் நீர்வரத்து ஓடை பள்ளப்பட்டி ரோடு வழியாக செல்கிறது.இந்த ஓடையில் 20 ஆண்டாக கழிவுநீர் மட்டுமே செல்கிறது. மழைக்காலங்களில் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல வழியின்றி ரோட்டில் தேங்கி நிற்கிறது. ஓடையில் தேங்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது.

காலனியில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் அனைத்தும் தெருவிளக்கு வசதியின்றி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவில் பெண்கள் தனியாக செல்ல முடியாத நிலை உள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 5 வருடத்திற்கு ஒருமுறை சாலை அமைக்க வேண்டும் என்ற நிலையில் முருகன் காலனி புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பூமதி கூறுகையில், காலனியில் குப்பை தொட்டி இல்லை. இதனால் ரோட்டில் குப்பை கொட்டப்படுகிறது. நகராட்சி மூலம் குப்பை அகற்றப்படாததால் சுகாதார கேடு நிலவுகிறது. கவிதா நகர் அருகே செல்லும் ஓடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி வீடுகளை சுற்றி தேங்கி நிற்கிறது என்றார்.

 ராஜாத்தி கூறுகையில், முருகன் காலனியை சுற்றி பராமரிப்பின்றி காணப்படும் திறந்தவெளி கிணறுகள் கொசு உற்பத்தி கூடாரமாக மாறியுள்ளன என்றார். இதுகுறித்து பொன்னுத்தாய் கூறுகையில், ‘காலனியில் வாறுகால் அமைத்து 25 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. வாறுகால் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதனால் கழிவுநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. 10 ஆண்டாகியும் திருத்தங்கல்-பள்ளபட்டி ரோடு சீரமைக்கப்படவில்லை. முருகன் காலனி நுழைவு பகுதியில் உள்ள ஹைமாஸ் விளக்கு பழுதாகி ஒன்றரை வருடமாகியும் சரிசெய்யப்படவில்லை’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : facilities ,municipality , Basic facilities, neglect, amendment, municipality, people of Aditi
× RELATED திருப்பத்தூர் நகராட்சியில் பரபரப்பு...