×

புகையிலை பொருட்கள் விற்கும் கடைகளில் வேறு பொருட்கள் விற்க விரைவில் தடை!!

சென்னை: சென்னையில் நடைபெற்ற புகையிலை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் பீடி, சிகரெட்டுகள் விற்கும் பெட்டிக்கடைகளில் பிற பொருட்கள் விற்கப்படுவதை தடுக்கும் சட்டத்தை தமிழகத்தில் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கை கன்சியூமர் வாய்ஸ் என்ற தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழக பொது சுகதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, மாநில புகையிலை கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனத்தினர் பங்கேற்றனர். கருத்தரங்கில் உரையாற்றியவர்கள் பெட்டிக்கடைகள் நடத்த வணிக உரிமம் பெறும் வியாபாரிகள், பீடி, சிகரெட் விற்பனை செய்வதாக இருந்தால் அந்த பொருட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று புகையிலை தடுப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக சுட்டிக்காட்டினர். சிகரெட், பீடி விற்கும் கடைகளில் சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள், குளிர்பானங்கள் என வேறு எந்த பொருட்களையுமே விற்பனை செய்யக்கூடாது என அந்த சட்டம் கூறுவதாக அவர் குறிப்பிட்டனர்.

புகையிலை தடுப்பு சட்டத்தின் இந்த சாராம்சத்தை வியாபாரிகளுக்கு வணிக உரிமம் வழங்கும் உள்ளாட்சி துறை கடுமையாக பின்பற்ற வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே அறிவுறுத்தியதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கேரளா, மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டுமே புகையிலை தடுப்பு சட்டம் தீவிரமாக பின்பற்றப்படுவதாகவும், தமிழகத்திலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி, சென்னையில் மட்டும் பொது இடங்களில் புகைப்பிடத்ததாக இந்த ஆண்டில் இதுவரை 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். கேரளா உள்ளிட்ட 8 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள புகையிலை தடுப்பு சட்டம் விரைவில் தமிழகத்திலும் தீவிரமாக பின்பற்றப்பட உள்ளதாகவும், தமிழக அரசு இதுகுறித்து விரைவில் அரசாணை வெளியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : stores , Tobacco products, shop, TN government, public health department
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...