ஆஸ்துமாவை அறிவோம்!

குளிரான சீதோஷ்ண நிலை, கடுமையான வெப்பம்… இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை என்றாலும், பனிக்காலம் ஆஸ்துமா உள்ளவர்களை அதிகம் சோதித்துவிடுகிறது. சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து வருவதால், ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ஆஸ்துமாவை எப்படி அறிவது?
Advertising
Advertising

மாசுபட்ட இடத்துக்குச் செல்கிறீர்கள். சற்று நேரத்தில் உங்களுக்கு வறட்டு இருமல் ஆரம்பிக்கிறது. அதைத் தொடர்ந்து இளைப்பு ஏற்படுகிறது. மூச்சுவிட சிரமப்படுகிறீர்கள். நுரையீரலிலிருந்து ‘விசில்’ சத்தம் கேட்கிறது. நெஞ்சில் பாரம் ஏற்றி வைத்த மாதிரி உணர்கிறீர்கள்...இந்த அறிகுறிகளில் ஒன்றிரண்டு தெரிகிறது என்றால் உங்களுக்கு ஆஸ்துமா உள்ளது என்று அர்த்தம்.

காரணங்கள்

ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும் முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைப்பிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது.பெற்றோருக்கு ஆஸ்துமா இருந்தால், வாரிசுகளுக்கு வருவதற்கு 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பெற்றோரில் ஒருவருக்கு மட்டும் ஆஸ்துமா இருந்தால், வாய்ப்பு 50 சதவிகிதம்.

* நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் ஆஸ்துமாவை தூண்டும். அடிக்கடி சளி பிடித்தால் ஆஸ்துமா நிரந்தரமாகிவிடும். அடுக்குத் தும்மல்கள், மூக்கொழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காத பட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும்.

*    குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துள்ள குழந்தைகளுக்கும் ஆஸ்துமா வரும் வாய்ப்பு அதிகம்.

*     கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்றவற்றாலும், நாம் சாப்பிடும் சிலமருந்துகளாலும் கூட ஆஸ்துமா வரலாம்.

பரிசோதனைகள்

வழக்கமான ரத்தப் பரிசோதனைகள், ஒவ்வாமைப் பரிசோதனை, மார்பு எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் ஆகியவற்றுடன், ‘ஸ்பைரோமெட்ரி’ (Spirometry) எனும் பரிசோதனை மூலம் மூச்சுக்குழலின் சுருக்க அளவையும் நம்மால் எவ்வளவு காற்றை எவ்வளவு வேகமாக சுவாசிக்க முடிகிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடியும்.

தவிர்ப்பது எப்படி?

* ‘சுத்தம் சுகம் தரும்’ என்பார்கள். இது ஆஸ்துமா உள்ளவர்களுக்குத் தாரக மந்திரம். வீடு, அலுவலகம், தெரு, சுற்றுச்சூழல்... இவை எல்லாமே சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். தூசு, குப்பை, ஒட்டடை மற்றும் அழுகிய உணவுப்பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்திவிட வேண்டும். தூசு, புகை நிறைந்த இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

*    படுக்கை விரிப்புகளும் தலையணை உறைகளும் எப்போதும் சுத்தமாக இருக்கவேண்டும். தலையணை உறைகளை அடிக்கடி மாற்றிவிட வேண்டும். தலையணை உறை சுத்தமில்லாவிட்டால் அதில் ‘மைட்’ எனும் கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் புழங்கும். அவை ஆஸ்துமாவைத் தூண்டும்.

*    ஆஸ்துமாவால் அவதிப்படுகிறவர்கள் கம்பளிப் போர்வையைப் பயன்படுத்தக்கூடாது. சில்லென்ற காற்று நேரடியாக அறைக்குள் வருவதைத் தடுக்க வேண்டும். இவர்கள் சுழல்விசிறிக்கு நேராகப் படுக்கக் கூடாது. அதேவேளையில் நல்ல காற்றோட்டமான அறையில் படுத்து உறங்குவது நல்லது.

* வாசனை திரவியங்களை அதிகமாகப் பயன்படுத்தக்கூடாது. ஊதுவத்திகள், கொசுவிரட்டிகள், சாம்பிராணிப் புகை, கற்பூரம் போன்றவற்றால் கூட ஆஸ்துமா அதிகமாகலாம். எனவே, இவற்றைத் தவிர்க்கவும்.

*    வீட்டைச் சுத்தப்படுத்துதல், வெள்ளை அடித்தல், வர்ணம் பூசுதல் போன்றவற்றை ஆஸ்துமா உள்ளவர்கள் செய்யக்கூடாது. இவர்கள் வீட்டில் இல்லாத நேரங்களில் மற்றவர்கள்தான் இவற்றைச் செய்ய வேண்டும். கட்டாயம் ஏற்பட்டால் முகத்தை துணியால் மூடிக்கொள்ள வேண்டும்.

*    ஆஸ்துமாக்காரர்கள் பூந்தோட்டம் வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. காரணம், பூக்களின் மகரந்தங்கள் ஆஸ்துமாவைத் தூண்டுகிற முக்கியமான காரணி.

*    வளர்ப்புப் பிராணிகளும் ஆகாது. பூனை, கோழி, வாத்து, நாய், புறா, கிளி போன்ற சில பிராணிகளின் இறகு, ரோமம், கெட்ட வாசனை மற்றும் கரப்பான் பூச்சியின் எச்சம் ஆஸ்துமாவை வரவேற்பவை.

*    பஞ்சுத் தூசு, ரைஸ்மில் தூசு, மாவுமில் தூசு, சிமென்ட் புகை, ஆஸ்பெஸ்டாஸ் புகை, நூற்பாலைக் கழிவு போன்றவை ஆஸ்துமா உள்ளவர்களுக்கு ஆகாதவை. இந்த மாதிரி இடங்களில் வசிப்பதையும் வேலை செய்வதையும் இவர்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் விறகு அடுப்பைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். முடியாதபோது புகையைவிட்டு தள்ளி இருப்பது நல்லது.

*    கோழிப்பண்ணை, ஆட்டுப்பண்ணை, ரொட்டிக்கடை, நூல்நிலையம், கம்பளித்தொழிற்சாலை ஆகியவற்றில் வேலை செய்வதைத் தவிர்ப்பதும் நல்லது.

உணவில் கவனம்!

ஆஸ்துமாவை ஏற்படுத்துவதில் உணவுக்கு முக்கிய பங்கு உண்டு. எந்த உணவினால் ஆஸ்துமா வருகிறது என்பதைக் கண்டுபிடித்துத் தவிர்த்தால் ஆஸ்துமா அடிக்கடி தொல்லை தருவதைத் தடுக்கலாம்.

*    பொதுவாக, ஆஸ்துமா உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் இவை:

*    எண்ணெயில் குளித்த, பொரித்த, வறுத்த உணவுகளையும்,  புளிப்பு மற்றும் மசாலா மிகுந்த உணவுகளையும், செயற்கை வண்ண உணவுகளையும், பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டு களில் அடைக்கப்பட்ட உணவுகளையும் குறைத்துக்கொள்வது நல்லது. சர்பத், ரோஸ்மில்க், லஸ்ஸி, கோக் பானங்களைக் குடிக்கவே கூடாது. குளிர்ந்த தண்ணீரில் குளிக்கக்கூடாது.

*    வயிறு முட்ட சாப்பிடக்கூடாது. அதிலும் இரவு உணவு எளிதாக செரிக்கும் வகையிலும் அளவோடும் இருக்க வேண்டியது  அவசியம். உறங்கச் செல்வதற்கு 2 மணி நேரத்துக்கு முன்பு இரவு உணவை முடித்துக்கொள்ள வேண்டும்.

*    இளஞ்சூடான தண்ணீரை அடிக்கடி அருந்தினால் நுரையீரலில் சேர்கிற சளி உடனுக்குடன் வெளியேறும். நீராவி பிடிப்பதால் ஆஸ்துமா தீவிரமாகாமல் தடுக்க முடியும்.

புகைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

புகை பிடிப்பவர்களுக்கு மத்தியில் செல்லக்கூடாது.

மதுவில் இருக்கிற ‘மால்ட்’ எனும் பொருள் ஆஸ்துமாவை தூண்டுகிற காரணி என்பதால் ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மதுவும் ஆகாது.

*    இன்ஃபுளூயென்சா, நிமோனியா போன்ற நோய்களுக்குத் தடுப்பூசி போட்டுக்கொண்டால் ஆஸ்துமா பாதிப்பு வராது.

மனக்கவலையை மாற்றவும்!

கவலையை மறப்பதற்கும் களைப்படையாமல் இருப்பதற்கும் வழிதேடுங்கள். அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்ததும்நன்றாக ஓய்வெடுங்கள். குடும்பத்தினருடன் கலகலப்பாகப் பேசி, சிரித்து மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். நல்ல நூல்களைப் படியுங்கள். பிடித்த இசையைக் கேளுங்கள். வார இறுதியில் குடும்பத்துடன் வெளியில் சென்று வாருங்கள். தினமும் அரைமணி நேரம் தியானம் பழகுங்கள். நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

மூச்சுப் பயிற்சி முக்கியம்!

தினமும் காலையில் எழுந்ததும் 10 நிமிடங்களுக்கு மூச்சுப் பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டால் ஆஸ்துமா  குறையும். மூச்சுப்பயிற்சிகளில் பலவிதங்கள் உள்ளன. மிக முக்கியமானது, பிராணாயாமம்.

என்ன சிகிச்சை?

இன்றைய மருத்துவ முன்னேற்றத்தில் மூச்சுக்குழாயை விரிவுபடுத்துவது, அதன் வீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, ஒவ்வாமையைத் தடுப்பது, ஆஸ்துமா பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது என்று பலதரப்பட்ட மருந்துகள் கிடைக்கின்றன. முக்கியமாக, இன்ஹேலர் இவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருமானால் காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சையை எடுத்துக்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும் !

- டாக்டர் கு.கணேசன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: