×

50 சதவீதம் புயலால் அழிந்தது பொங்கல் செங்கரும்பு விலை கடுமையாக உயரும்

கும்பகோணம்: தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் விழா வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வீடுகளில் வர்ணம் அடித்து மண் அடுப்பு கட்டி, புத்தரிசியில் பொங்கல் வைத்து மக்கள் கொண்டாடுவர். பொங்கல் விழா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது செங்கரும்பு தான்.பொங்கல் பண்டிகைக்காக  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, சூரக்கோட்டை, பட்டுக்கோட்டை, அணைக்கரை, கடிச்சம்பாடி, நீரத்தநல்லூர், சுவாமிமலை, உமையாள்புரம், அம்மாப்பேட்டை, கபிஸ்தலம், திருவையாறு உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் 1,000 ஏக்கரில் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் 16ம் தேதி கஜா புயல் தாக்கியபோது தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டது.  தஞ்சை மாவட்டத்தில் 1,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு  ஒருமாதத்தில் அறுவடை செய்வதற்காக தயார் நிலையில்  கரும்பு பெருமளவில் பாதிக்கப்பட்டது.

 ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, அம்மாப்பேட்டை, அணைக்கரை, திருவையாறு உள்ளிட்ட பகுதிகளில் செங்கரும்புகள் அடியோடு சாய்ந்தது. மேலும் செங்கரும்புகள் பாதி நிலையிலேயே முறிந்தும் கரும்புகளில் நீர்சத்து இல்லாமல் சுருங்கி வளர்ச்சியின்றியும் காணப்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் 1,000 ஏக்கர்  சாகுபடி செய்யப்பட்டு  இருந்த செங்கரும்பு கஜா புயலால் 500 ஏக்கருக்கு மேல்  நாசமாகி விட்டது.
இதனால் பொங்கல் பண்டிக்கைக்கு கரும்பின் விலை உயரவும், தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம், செங்கரும்பு சாகுபடி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பட்டீஸ்வரம் கரும்பு விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பஞ்சாபிகேசன் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் 1,000 ஏக்கர் அளவில் பொங்கல் பண்டிகைக்காக செங்கரும்பு கடந்த சித்திரை மாதம் பதியம் வைத்து தற்போது மார்கழி மாதம் இறுதியில் அறுவடைக்காக கரும்புகள் காத்திருக்கிறது. கஜா புயலால் 50 சதவீத செங்கரும்புகள் நாசமானதால், வரும் பொங்கல் பண்டிகையின்போது 10 கரும்பு கட்டு கடந்தாண்டுகளில் ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது. வரும் பொங்கல் பண்டிகையின்போது 10 கரும்பு கட்டு ரூ.400க்கு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. சில்லரை விலையில் விற்கும்போது பொங்கல் தினத்தில் ஒரு கரும்பு 50 ரூபாய் அளவில் விற்பனையாகும்  நிலை உருவாகி உள்ளது. எனவே பொங்கல் பண்டிகைக்காக சாகுபடி செய்து நாசமாகியுள்ள செங்கரும்பு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm , Storm, pongal, bronze price
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...