×

கஜா புயலால் 1 மாதமாக மின்சாரம் இல்லை தண்ணீரின்றி பாளம் பாளமாக வெடித்த வயல்கள்

தஞ்சை: தஞ்சை அடுத்த சூரக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் கல்லணை கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகிறது.  கல்லணை கால்வாயில் இருந்து தண்ணீர் விடப்படாத காலங்களில் பம்ப்செட் உதவியுடன் நெல் பயிர்கள் மட்டுமின்றி கரும்பு உள்ளிட்ட மற்ற பயிர்களையும் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த மாதம் கஜா புயல் தாக்கியதில்  டெல்டா மாவட்டங்களில் பல்லாயிரகணக்கான மின் கம்பங்கள் சாய்ந்தது. மின்சார ஒயர்கள் அறுந்து மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டது. இதை சீர் செய்யும் பணியில் மின்சார பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.  ஆனாலும் பெரும்பாலான கிராம பகுதியில் மும்முனை மின்சாரம் என்பது இன்னும் கிடைக்கவில்லை. இதனால் பம்ப்செட் இயக்க முடியாத நிலையில் விவசாயிகள் தத்தளித்து வருகின்றனர்.

குறிப்பாக தஞ்சை அருகே சூரக்கோட்டை பகுதியில் 5,000 ஏக்கரில் பம்ப்செட்டை முழுவதுமாக நம்பி சாகுபடி செய்திருந்த தாளடி நெற்பயிர் தண்ணீரின்றி காய்ந்து, வயல்கள் பாளம் பாளமாக வெடித்து வருகிறது.   எப்படி இந்த தாளடி பயிரை காப்பற்ற போகிறோம் என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர். இதுகுறித்து சூரக்கோட்டை விவசாயி ராமு கூறியதாவது: கஜா புயல் தாக்கியதில் ஒரத்தநாடு பகுதி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குரிய நிவாரணம் இதுவரை கிடைக்கவில்லை. கஜா புயலால் மின்தடை ஏற்பட்டு ஒரு மாதமாகவிட்டது. ஆனால் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு தேவையான மும்முனை மின்சாரம் இன்னும் வழங்கவில்லை.

இதனால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை உள்ளது. தாளடி நெற்பயிர்  சாகுபடி செய்து 50  நாட்களான நிலையில் தண்ணீர் கிடைக்காத காரணத்தால் இந்த பயிர்கள் எல்லாம் கருகும் சூழ்நிலையில் உள்ளது.
வயல்வெளிகள் எல்லாம் தண்ணீரின்றி வெடித்து வருகிறது. புயலுக்கு முன்பே கல்லணை கால்வாயில் இருந்து பாசனத்துக்கான தண்ணீர் நிறுத்தப்பட்டது. தற்போது தண்ணீர் திறந்தும் பயனில்லாமல் உள்ளது. பம்ப்செட் உதவியுடன் நெற்பயிரை காப்பாற்றலாம் என்றால் மின்சாரம் இல்லை. இப்படி இருக்கும்போது எப்படி நெற்பயிரை காப்பற்ற முடியும். சூரக்கோட்டை பகுதியில் 5,000 ஏக்கரில் தாளடி நெல் பயிர் கருகும் அபாயத்தில் உள்ளது என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : gas storm , A storm of wind, electricity, and a basin of water. Fields
× RELATED உருவானது வாயு புயல்... குஜராத்தில் ஜுன்...