×

மதுரை தோப்பூரில் ரூ.1,258 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், 14 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்படும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவித்தது. அதன்படி கடந்த 2014-15, 2015-16, 2017-18-ம் ஆண்டு பட்ஜெட்டில் 13 எய்ம்ஸ்கள் அமைக்க அறிவிப்பு வெளியாகின.

ஜம்மு, காஷ்மீர், பிஹார், தமிழகம், குஜராத் ஆகிய 5 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. தமிழகத்தில் மதுரை மாவட்டம் அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. இதனையடுத்து கடந்த ஜூன் 20-ம் தேதி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி், 200 ஏக்கர் பரப்பளவில் 750 படுக்கை வசதியுடன் கூடிய நவீன எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக 100 இடங்கள் ஏற்படுத்தப்படும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க உத்தரவிட்ட பிரதமர் மோடி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சருக்கு நன்றி. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையின்படி தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கிறது. எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து மதுரை எம்ய்ஸ் மருத்துவமனை குறித்து மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்திருந்தார். அதன்படி மதுரை மாவட்டம் தோப்பூரில் எம்ய்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் எதுவும் விடப்படவில்லை என்றும் எப்போது இந்த மருத்துவமனை கட்டி முடிக்கப்படும் என்ற காலக்கெடுவும் குறிப்பிடப்படவில்லை என கடந்த செப்டம்பர் மாதம் ஆர்டிஐ தகவல் தெரிவித்தது. இதனால் தமிழக மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ரூ.1,258 கோடியில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் எம்ய்ஸ் மருத்துவமனை அமைக்க ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவைக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். தெலுங்கானாவிலும் பிபி நகரில் எய்ம்ஸ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Cabinet ,hospital ,Madurai ,AIIMS ,Tirupur , Madurai, Aims Hospital, Central Cabinet, Approved
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...