திருச்சி முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் புதிய அணை கட்ட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கர்நாடகாவில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை கொட்டித்தீர்த்ததால்  அணைகள் நிரம்பி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி முதல் படிப்படியாக உயர்ந்து 20ம்  தேதி 2.20 லட்சம் கனஅடி நீர் மேட்டூருக்கு வந்தது.  உபரிநீர்  அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. இதேபோல் கேரளாவிலும், தமிழகத்தின் நீலகிரியிலும் பெய்த மழையால் பவானி சாகர் அணை நிரம்பி அமராவதி அணை, மாயனூர்  தடுப்பணை வழியாக காவிரியில் கலந்தது.  இதனால் காவிரியில் வினாடிக்கு சுமார் 3 லட்சம் கனஅடி வீதம் திருச்சி முக்கொம்பு வந்தடைந்தது. முக்கொம்பில் இருந்து 50ஆயிரம் கனஅடி காவிரியிலும், 2.5 லட்சம் கனஅடி நீர் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி நள்ளிரவு 8.30 மணியளவில், 180 ஆண்டுகள் பழமையான முக்கொம்பு மேலணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்படும் 45 மதகுகளில் 9 மதகுகள் திடீரென  உடைந்தது. மதகுகள் பொருத்தப்பட்டிருந்த தூண்களும் சரிந்தன. இதனால் கொள்ளிடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலணையில் 9 மதகுகள் உடைந்ததால் கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையே தமிழக அரசு இன்று அரசாணை ஒன்றை வெளியிட்டது. அதில், திருச்சி மாவட்டம் முக்கொம்பில் ரூ.387 கோடி செலவில் 55 கதவணைகளுடன் புதிய அணை கட்டப்படும் என குறிப்பிட்டுள்ளது. மேலும் புதிய  அணை மூலம் தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், திருச்சி, அரியலூர் மாவட்டங்கள் பயனடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அணையால் 12 லட்சத்து 58 ஆயிரத்து 460 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று  குறிப்பிடப்பட்டுள்ளது. அணையில் இருந்து 2 லட்சத்து 83 ஆயிரம் கன அடி நீரை வெளியேற்ற முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: