கடற்கரையை சுத்தப்படுத்தும் வரை மெரினாவில் ஒருமாதம் நடைப்பயிற்சி: மாநகர, காவல் ஆணையர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: மெரினா கடற்கரையை சுத்தப்படுத்தும் பணிகளை நடைப்பயிற்சி செய்து பார்வையிட சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது. மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றிற்கு மாற்று இடம் வழங்குவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும் மெரினாவை சுத்தப்படுத்த திட்டம் வகுக்கவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் அனிதா சுமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு தொடர்பாக மாநகராட்சி ஆணையர் ஆஜராகியிருந்தார்.

அப்போது மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்த பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும், காலை, மாலை, இரவு என மூன்று நேரங்களில் 250 பணியாளர்கள் துப்புரவு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மெரினாவை சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில், ஒரு மாதத்திற்கு தினமும் அங்கு காவல்துறை ஆணையருடன் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர். மேலும் மெரினா கடற்கரையை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதி, மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட இருக்கும் உட்கட்டமைப்பு விவரங்கள் குறித்து அறிக்கையாக தாக்கல் செய்ய நீதிபதிகள் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 10ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: