எப்படி ஆங்கிலேயர்கள் ஜெயித்தார்கள்..?

ஜமீன்களின் கதை  

ஆங்கிலேயர்களுடைய வளர்ச்சி இந்த மண்ணில் ஓங்கியதற்கு ஒருவகையில் பிரெஞ்சுக்காரர்களுக்கும் அவர்களது இந்தியக் கூட்டாளிகளுக்கும் ஏற்பட்ட மோதலே காரணம். இந்தச் சூழலில் இந்தியாவின் தென்பகுதி சுழன்று வரும் அரசியல் சக்கரத்தின் அச்சாணியாக விளங்கியது. அதாவது சச்சரவிட்டுக் கொண்டிருந்த அரசியல் சக்திகளின் தலைவிதியை நிர்ணயிக்கும் இடமாக தென்னகம் மாறியது. வியாபார நிமித்தமாக இந்திய நாட்டுக்கு வந்த ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்ட ஆதிக்கச் சண்டையின் வெற்றித் தோல்விகளை தீர்மானிக்கும் இடமாகவும் அரசியல் சூழ்ச்சிகளின் நிலைக்களனாகவும் இப்பகுதி மாறியது.

1746 - 1748க்கு இடைப்பட்ட காலத்தில் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் முதல் கர்நாடகப் போரில் ஈடுபட்டார்கள். இந்தப் போரின் முடிவு மூன்று முக்கியமான விளைவுகளை ஏற்படுத்தியது. பிரெஞ்சுக்காரர்கள் செய்தது போல் 1748ல் ஆங்கிலேயர்கள் இந்திய வீரர்களைக் கொண்ட சிறிய இராணுவ அமைப்பை ஏற்படுத்தி மதராஸுக்கும் பாதுகாப்பாக வைத்துக் கொண்டனர். இந்த சிறிய அமைப்பு தொடக்கத்தில் சாதாரணமான சண்டைகளுக்கு பயன்படுத்தப்பட்டது. என்றாலும் பின்னால் ஆங்கிலேயர்களுடைய பெரியப் பெரிய போர்களில் வியத்தகு பங்கை வகித்தது.

அடையாற்றுக்கு அருகில் நவாப் படைகளுக்கும் பிரெஞ்சுப் படைகளுக்கும் நடந்த சண்டையில் பிரெஞ்சுப் படைகள் வெற்றிப் பெற்றன. இதன் மூலம் ஐரோப்பியர்களுடைய கட்டுப்பாடான இராணுவப் பயிற்சியும் இராணுவ முறைகளும் இந்திய இராணுவத்தைக் காட்டிலும் பல வகையிலும் உயர்ந்த தன்மை வாய்ந்தது என நிரூபணமாகியது. இதுவே ஐரோப்பியர்களுக்கு தங்களது படைபலத்தின் பலனையும் அதை மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியத்தையும் தோற்றுவித்தது.

அதேசமயம் ‘உதவியும் ஒப்பந்தமும்’ என்ற கொள்கை அடிப்படையில் இந்திய மன்னர்களிடம் வர்த்தக அரசியல் ஆதாயம் பெற வாய்ப்பு இருப்பதை ஐரோப்பியர்கள் கண்டுகொண்டனர். இத்தகைய கொள்கையே காலப்போக்கில் இந்த மண்ணை ஆண்ட அரசர்கள் அழிவதற்கும் ‘ஓய்வூதியம்’ பெறும் நிலைக்கு தள்ளப்பட்டதற்கும் காரணமானது. இரண்டாவது கர்நாடகப் போர், இந்நாட்டு அரசர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் நடந்தது. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என  இப்போரைச் சொல்லலாம்.

திருச்சியில் நடந்த இப்போரில் சந்தாசாகிப்புக்காகவும் முஜாபர் ஜங்கிற்காகவும் கலந்து கொண்ட பிரெஞ்சுக்காரர்கள் முதற்கட்டத்தில் வெற்றிப் பெற்றார்கள். ஆர்க்காடு பகுதிக்கு சந்தாசாகிப்பும் ஐதராபாத் பகுதிக்கு முஜாபர் ஜங்கும் அரசுரிமைப் பெற்றனர். நிலமையை சரிசெய்ய சந்தாசாகிப்போடு ஆம்பூரில் நடந்த சண்டையில் போரிட்டு மடிந்த நவாப் அன்வர்தீனின் மகன் மகமது அலியை ஆங்கிலேயர்கள் நாடினார்கள். தொடக்கத்தில் ஆங்கிலேயர்கள் வெற்றிப் பெறுவது குதிரைக் கொம்பாக இருந்தது.

ஆனால், எப்போது முன்பு நாயக்க மன்னர்களின் தலைநகராக விளங்கிய திருச்சிக் கோட்டையில் மகமது அலி தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினாரோ அப்போது முதல் ஆங்கிலேயர்களுக்கு ஏறுமுகமானது. இந்தக் கோட்டைக்கான கடுமையான போர் 1751ல் தொடங்கியது. பிரெஞ்சுப் படையும்

சந்தாசாகிப்பின் படையும் திருச்சிக் கோட்டையை முற்றுகையிட்டன. 1752 ஜூன் முடிய அம்முற்றுகையில் தளர்வும் கடுமையும் மாறி மாறி வந்தன.

மைசூர், தஞ்சாவூர் படைகளின் உதவி கொண்டு பிரெஞ்சு மற்றும் சந்தாசாகிப்பின் படைகளை எதிர்பாராதவிதமாக ஆங்கிலேயர்கள் தாக்கினர்.

இப்போரில் பிரெஞ்சுப் படைகள் அழிக்கப்பட்டன. சந்தாசாகிப் கொல்லப்பட்டார். இப்போரே ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்துக்கு திருப்புமுனையானது. பிரெஞ்சுக்காரர்களது அரசியல், வணிக நம்பிக்கைகளை இப்போரின் வழியே ஆங்கிலேயர்கள் தகர்த்து எறிந்தனர். கர்நாடகத்தில் தங்களுக்கு என நிலையான அதிகாரத்தை தோற்றுவித்தனர். அதாவது பின்னால் நம் நாட்டின் வளங்களை எல்லாம் சுரண்டுவதற்கு இதுவே பிள்ளையார் சுழி போட்டது!

இதனைத் தொடர்ந்து ராபர்ட் க்ளைவ் 1757ல் கர்நாடகத்தில் இருந்து வங்காளம் சென்று சிராஜ் உத் தெளலாவை பிளாசிப் போரில் தோற்கடித்தார்.

திருச்சிப் போரில் ஈடுபட்டதன் காரணமாக மைசூர் பெரும் பொருள் இழப்புக்கு ஆளானது. எதிர்பார்த்தது போல் மைசூர் அரசுக்கு திருச்சி சண்டையால் எதுவும் கிடைக்காமல் போகவே அந்த அரசின் பொருளாதாரமும் படையும் சிக்கலுக்கு ஆளானது. விளைவு நிஜாம் மன்னர் மற்றும் மராட்டிய பேஷ்வாக்குகளின் தாக்குதலுக்கு மைசூர் அரசு பலியானது.

இந்த காரணத்தால்தான் பின்னால் ஆங்கிலேயர்களை எதிர்த்து மைசூர் அரசு நடத்திய போரில் சங்கடங்களும் தடைகளும் ஏற்பட்டன.

1756க்கும் 1763க்கும் நடுவில் வேறுபட்ட ஐரோப்பியர்களுக்கு இடையில் 3வது போர் நடந்தது. பிரெஞ்சுக்காரர்கள் கையாண்ட எந்த முயற்சியும் அவர்களுக்கு பலனளிக்கவில்லை. கிழக்கு கடற்கரைப் பகுதியில் பல்வேறு வளங்களினால் பயன்பெற்ற ஆங்கிலேயர்கள், தங்கள் ஒரே எதிரியான பிரெஞ்சுக்காரர்களை சிதறடித்தார்கள். ஆந்திர கடற்கரைப் பகுதிகளிலும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநாட்டினர்.

பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கம் நம் மண்ணில் ஒரு முடிவுக்கு வந்தது. ஆங்கிலேயர்களின் அரசியல் பொருளாதார செல்வாக்கு வளர்ந்தது. அதேசமயம் கர்நாடகப் போரின் முடிவில் இந்திய அரசியல் வானில் கார்மேகம் சூழ்ந்தது. என்றாலும் 18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முகலாயப் பேரரசு பலமிழந்தபோது இருந்த அரசியல் குழப்பத்தை விட கர்நாடகப் போரின் முடிவிலிருந்த அரசியல் குழப்பம் குறைவானதுதான். இச்சூழலில் 4 அரசுகள் உருவாகி அவற்றுள் போட்டிகளும் நடந்து அவை இந்திய துணைக்கண்டத்தின் அரசியலை நிர்ணயிக்கத் தொடங்கின.

தென்பகுதியில் மைசூர் அரசு உருவானது. 1761ல் சிறந்த அரசியல் நிர்வாகியும் மாவீரருமான ஹைதர் அலி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினார். அப்பொழுது மைசூர் அரசு பேஷ்வாக்களுடனும் நிஜாம் அரசுடனும் அடிக்கடி சண்டையிட்டு பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றிருந்தாலும் ஹைதர் அலி பலம் பொருந்திய படையை உருவாக்கினார். தக்காணத்தில் நிஜாம் உல்மல்க், முகலாயப் பேரரசின் அதிகாரத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு ஐதராபாத்தை தலைநகராகக் கொண்டு சுதந்திர ஆட்சி நடத்தத் தொடங்கினார்.

இவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்புக்காக ஏற்பட்ட தகராறு காரணமாக உள்நாட்டுக் குழப்பம் அதிகரித்தது. நிஜாம் அலி சில நாட்களில் அமைதியை ஏற்படுத்தினார். பரந்த நிஜாம் பேரரசை நிஜாம் அலி ஆண்டாலும் நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தவும் சிறந்த படையை உருவாக்கவும் தவறினார். இக்காலகட்டத்தில் மராட்டியத்தில் ‘மராட்டா கூட்டாச்சி’ இருந்தது. மராட்டியர்கள் வாழும் பகுதிகளை ஒன்று சேர்த்து மராட்டிய அரசை சிவாஜி உருவாக்கிய பின், இந்தியாவின் பலப் பகுதிகளில் தங்கள் ஆதிக்கத்தை அவர்கள் நிலைநாட்டினர்.

1761ம் ஆண்டு பானிபட்டில் மராட்டியர்களுக்கும் ஆப்கானியர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில், மராட்டா கூட்டாச்சி உடைந்தது. இதனைத் தொடர்ந்து தோன்றிய வலுவிழந்த தலைவர்களால் இழந்தப் புகழை மராட்டியர்களால் மீட்க முடியாமல் போனது. இவற்றுக்கு இடையில்தான் ஆங்கிலேயர்

களின் கிழக்கிந்தியக் கம்பெனி வளர ஆரம்பித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தங்கள் தொழில் நிறுவனங்களை உருவாக்கி வணிகத்தைப் பெருக்கினர். கூடவே இந்திய அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற தந்திரங்களையும் ரகசிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர்.

மதராஸ், கொல்கத்தா, பம்பாய் ஆகிய நகரங்கள் ஆங்கிலேயர்களின் மேற்கூறிய நடவடிக்கைகளுக்கு மையங்களாக விளங்கின. கர்நாடக கடற்கரைப் பகுதியில் 1639ல் ஆங்கிலேயர்களால் விலைக்கு வாங்கிக் கொள்ளப்பட்ட சென்னை மாநகரம், அரசியல் வணிக ஈடுபாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. இதன் ஒரு பகுதியாக 1652ல் ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனியின் வணிகத் தலைநகரமான கிழக்கிந்திய தீவுகளில் இருந்த ‘பாண்டம்’ மாற்றப்பட்டு சென்னை அந்நிறுவனத்தின் வணிகத் தலைநகராக மாற்றப்பட்டது.

ஏனெனில் இந்தியாவில் கிழக்கிந்திய ஆதிக்கத்தில் இருந்த மற்ற நகரங்களுடன் தொடர்பு கொள்ள சென்னையே அவர்களுக்கு வசதியாக

இருந்தது. வங்காளம், பர்மா, சயாம், சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கு கடல் வழியில் செல்லவும் சென்னையே அவர்களுக்கு வசதியாக இருந்தது. 1661ல் போர்ச்சுக்கீசியர் வசம் இருந்த பம்பாய், ஆங்கிலேயர் கைக்கு வந்தது. 1687ல் அதை அரசியல் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நகராக மாற்றினார்கள். இதன் வழியாக இந்தியாவின் மேற்குப் பகுதியை ஆங்கிலேயர்களால் கண்காணிக்க முடிந்தது.

1690ல் கங்கை நதியின் டெல்டா பகுதியில் கல்கத்தா நகரத்தை தோற்றுவித்து தங்கள் ஆதிக்கத்தை அங்கு நிலைநிறுத்த ‘போர்ட் வில்லியம்’ என்ற கோட்டையை அமைத்தனர். இப்படியாக இந்தியாவின் மூன்று கடற்பரப்புகளும் ஆங்கிலேயர்களின் வசத்துக்கு வந்தன. இவை அனைத்தையும் படிக்கும்போது ஏதோ எதிர்ப்புகளே இன்றி ஆங்கிலேயர்கள் இந்தியாவைக் கைப்பற்றியதுபோல் தோன்றுகிறதா..? அதுதான் இல்லை. ஐரோப்பியர்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக எழுந்த போராட்டம் நீண்ட வரலாற்றைக் கொண்டது. தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தது.

இந்திய சிற்றரசர்களும் அந்தந்த பகுதிகளில் செல்வாக்குப் பெற்றிருந்த தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஏறத்தாழ 100 ஆண்டுகள் மலமார் கடற்கரையிலுள்ள வீரமிக்க தளபதிகள் போர்ச்சுக்கீசியர்களுடன் அடிக்கடி போரில் ஈடுபட்டு அவர்களது ஆதிக்கம் பரவுவதை தடை செய்தனர். மூன்றாவது குஞ்ஞாலி என்ற ஆற்றல்மிக்க தளபதி, 40 ஆண்டுக்காலம் போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கம் பரவாமல் தடுத்தார். கோழிக்கோட்டை ஆண்டுவந்த ஜம்மூதிரி, இவர்களுடன் போர் செய்வதற்காக தனக்கு ஆதரவு தர வேண்டி குஜராத் அரசையும் துருக்கி நாட்டு அரசையும் கேட்டுக் கொண்டார்!

ஜம்மூதிரியின் வேண்டுகோளை ஏற்று துருக்கி பேரரசர் சுல்தான் சுலைமான் கடற்படை ஒன்றை அனுப்பினார். குஜராத்தை ஆண்டு வந்த

பகதூர் ஷா, 1537ல் ஐரோப்பியர்களை எதிர்த்து சண்டையிட்டு போர்க்களத்தில் மாண்டார். இப்படிப்பட்ட எதிர்ப்புகள் இருந்தாலும் இறுதியில் போர்ச்சுக்கீசியர்களின் கடலாதிக்கமே ஓங்கியது. விஜயநகர / முகலாயப் பேரரசுகள் போர்ச்சுக்கீசியர்களின் வணிக ஆதிக்கம் இந்திய மண்ணில் வளர ஆதரவளித்தன! முகலாயப் பேரரசு மெக்கா செல்லும் புனிதப் பயணிகளை கொண்டு செல்லும் நகரத்தை ஆண்ட ராயர்களுக்கு போர்ச்சுக்கீசியர்களின் போர்க் கருவிகளை வழங்கினர்.

இதே போர்ச்சுக்கீசியர்கள் இந்துக்களின் நண்பர்கள் என விஜயநகரத்தை ஆண்டவர்கள் நம்பினார்கள்! என்றாலும் வங்காளத்தில் மேலைநாட்டவர்களின் ஆதிக்கம் பரவாமல் இருக்க முகலாயர்கள் ஓரளவு முயற்சி எடுத்தார்கள். இதையும் மீறி வங்காளத்தின் வளமும் செல்வச் செழிப்பும் அம்மண்ணின் பெண்களின் பேரெழிலும் ஆங்கிலேயர்களை வசீகரித்தன. வரவும் செய்தார்கள். விளைவு, ‘வாவென வரவேற்க ஆயிரம் கரங்களைப் பெற்றோரும், போவென சுட்ட ஒரு விரலும் பெற்றாரில்லை..!’ என்ற பொன்மொழி பிறந்தது.

ஆங்கிலேயர்களின் செல்வாக்கால் வங்காளத்தில் ஒழுக்கக்கேடும், கடற்கொள்ளையும் அதிகரித்தன. மனம் வெம்பி பெர்னியர் என்ற எழுத்தாளர், ‘வங்காளத்து கிராமங்களில் திருமணத்துக்கோ, திருவிழாக்களுக்கோ கூடுகின்ற மக்களையும், சந்தை நாட்களில் குவியும் மக்களையும் ஐரோப்பியர்கள் மந்தைகள் போல் கடத்திச் சென்றார்கள்...’ என குறிப்பிட்டிருக்கிறார். இப்படி அதிகரித்த கொடுமைகளைக் கண்டு வெகுண்டெழுந்துதான் ஷாஜகான் படை ஒன்றை வங்காளத்துக்கு அனுப்பினார்!

(தொடரும்)

- கே.என்.சிவராமன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>