கைமாறுது வேளாண்மையின் அதிகாரம்!

தேசிய அளவில் விவசாய விளைபொருட்களுக்கான சந்தையைப் பரவலாக்கவும் அதன் ஆதார விலையை நிர்ணயிக்கவும் மத்திய அரசு e-NAM எனப்படும் மின்னணுச் சந்தையைத் திட்டமிட்டுள்ளதைப் பற்றிக் கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். விவசாயிகளுக்கும் உள்ளூர் கமிஷன் மண்டி ஏஜென்டுகளுக்கும் உள்ள உறவானது இவர்கள் விவசாயிகளின் நண்பர்களா பகைவர்களா என பட்டிமன்றம் நடத்தும் அளவு சிக்கலானது. பெரும்பாலான விவசாய விளைபொருட்களுக்கான விலையைத் தீர்மானிப்பவர்களாக இந்த வியாபாரிகளே உள்ளனர்.

இந்திய விவசாய சந்தை முறையின் பெரும் குறை இது. உழுபவன் கையில் நிலம் இல்லை; அறுப்பவன் கையில் விலை இல்லை எனில் யாருக்கான தொழில் இது என்றுதான் விவசாயிகள் எப்போதுமே குமுறுவார்கள். உலகில் வேறு எந்தத் தொழிலிலுமே வாங்குபவன் விலையை நிர்ணயம் செய்யும் அவலம் நடப்பது இல்லை. விவசாயத்தில் மட்டுமே நடக்கிறது என்று சொல்வார்கள்.

ஆனால் -மறுபுறம் உள்ளூர் கமிஷன் மண்டி ஏஜென்டுகள், வியாபாரிகள் விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு வைத்திருப்பதால் அந்த உறவு உணர்வுப்பூர்வமானதாய் உள்ளது. இப்படியான, சூழலில்தான் கார்ப்பரேட்டுகள் விவசாயத்துக்குள் நுழைகின்றன. தனியார் மற்றும் கார்ப்பரேட் வேளாண்மை நிறுவனங்கள் இந்தியச் சந்தையில் சுதந்திரமாக இயங்குவதற்கு உள்ளூரளவில் செயல்படும் சந்தைகளும், இடைத்தரகர்களும் பெரும்

தடையாக உள்ளனர். தங்களுக்கு நெருக்கமாகவும்,

ஏற்கெனவே அறிமுகமானவர்களாகவும் இருப்பதால் உள்ளூர் தரகர் மற்றும் வியாபாரிகளையே விவசாயிகள் நம்பிக்கைகுரிய நபர்களாகப் பார்க்கின்றனர். இந்தச் சந்தை முறைக்கு அப்பாற்பட்ட அந்நிய நிறுவனங்களால், விவசாயிகளின் நம்பிக்கையைப் பெற முடியவில்லை. இந்த சிக்கலை எதிர்கொள்ளவே உள்ளூர் கமிஷன் மண்டிக்காரர்களின் சுரண்டலிலிருந்து விவசாயிகள் விடுபட வேண்டுமானால், நேரடியாக தேசியச் சந்தையை அணுக வேண்டும் என்றும், அங்கே ஒரு பொன்னுலகம் காத்திருப்பதாகவும் ஒரு சித்திரத்தை உருவாக்குகின்றனர்.

ஒரே தேசம்  ஒரே வரி, ஒரே சந்தை என்ற கோஷமுடன் களமிறங்கும் இந்தத் திட்டத்தின் உள்ளார்ந்த நோக்கம் கார்ப்பரேட்களின் நலன்தான் என்பதை நம்பாமல் இருக்க முடியவில்லை என்கிறார்கள் விவசாய-பொருளாதார அறிஞர்கள். உள்ளூர் கமிஷன் மண்டிக்காரர்களின் சுரண்டலை ஒழிப்பது என்ற பெயரில் உள்ளூர் அளவிலும், மாநில அளவிலும் நிலவுகின்ற பொருளாதாரத்தை முற்றிலுமாக வேரறுப்பதும், இந்தியப் பெரு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் நேரடிக் கொள்ளைக்கு வேளாண் சந்தைகளைத் திறந்து விடுவதுமே மின்னணு வர்த்தகச் சந்தை முறையின் நோக்கம்

என்கிறார்கள் அவர்கள்.

விவசாய விளைபொருட்களின் ஆன்லைன் வர்த்தகத்துக்கு e-NAM மிக அவசியம் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பட்ஜெட் உரையில் அருண் ஜெட்லி கூறியதையும் FICCI மற்றும் CII போன்ற சங்கங்கள், வேளாண் விற்பனைக் கமிட்டிகளை ஒழித்துவிட்டு அந்த இடத்தில் e-NAM -ஐ கொண்டு வர வேண்டும் என்று கோரி வருவதையும் இதற்கான நிரூபணங்களாகப் பார்க்கலாம்.வெறும் 250-ஆக உள்ள மின்னணு வேளாண் சந்தை நடப்பாண்டில் (2017 - 18)  585-ஆக உயர்த்தப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் மோடி அறிவித்துள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

சரி இந்த மின்னணு சந்தையின் மூலம் என்னதான் மாற்றங்களைக் கொண்டுவருகிறார்கள் இவர்கள்? தமிழகத்தில் மதுரை, ஒட்டன்சத்திரம், கோயம்பேடு போன்ற பெரும் காய்கறி, கனிச் சந்தைகள் இருப்பதைப் போல நாடு முழுவதும் பல நூறு சந்தைகள் உள்ளன. இவை அனைத்தும் தற்போதும் அந்தந்த ஊரின் கமிஷன் ஏஜென்டுகள் மூலம் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இதை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே சந்தையாக மாற்றுவதன் மூலம் இடைத்தரகர்களை ஒழித்து ஆதார விலையை நிர்ணயித்து, விவசாயிகளை நேரடியாக நெருங்க முடியும் என்பது திட்டம்.

இந்தியாவில் உள்ள முக்கிய வேளாண் சந்தைகளின் தினசரி விலை நிலவரம், சேமிப்புக் கிடங்குகளில் உள்ள சரக்குகளின் இருப்பு விவரம் ஆகியவற்றை மின்னணு விவரங்களாகத் திரட்டுவது இதன் முதன்மை நோக்கம். இதன் மூலம் எந்த மாநிலத்திலிருக்கும் ஒரு வர்த்தகரும், விவசாயியும் நாடு முழுவதுமுள்ள விலை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.  குறைந்தபட்ச ஆதரவு விலை தீர்மானிக்கப்பட்ட இருபத்தைந்து விளை பொருட்களுக்கு லாபகரமான விலையைப் பெற பேரம் பேச முடியும்.

இதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வியாபாரிகளுக்கு விற்கலாம். வணிகர்கள், கமிஷன் ஏஜென்டுகள் மற்றும் கொள்முதல் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற, தாராள லைசென்ஸ் வழங்குவது, வேளாண் பொருள்களுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தர நிர்ணயம் மற்றும் ஏல விதிமுறைகளை உருவாக்குவது, அரசின் வேளாண் விற்பனைக் கமிட்டி (APMC)-யின் செயல்பாட்டு வரம்பைக்

கட்டுப்படுத்துவது, கொள்முதல் செய்யும் இடத்தில் மட்டுமே வரி விதிப்பது (single point levy), நாடு முழுவதும் வர்த்தகம் செய்ய ஒரே லைசென்ஸ் வழங்குவது ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கித்தான் இந்த வேளாண் மின்னணு வர்த்தகச் சந்தை வடிவமைக்கப்பட்டுவருகிறது.

இது எல்லாம் நடைமுறை சாத்தியமானதா என்ன? நம் ஊரில் உள்ள ஒரு விவசாயியை வேறு யார் நெருங்க முடியும் என்று சிலர் நினைக்கக்கூடும். கடந்த 2015ம் ஆண்டு கர்நாடகாவில் நிகழ்ந்ததை அறிந்தால் இதன் தீவிரத்தை நாம் உணரக்கூடும். அங்கே ராஷ்ட்ரிய இ-மார்க்கெட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் (ReMS) என்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனத்துடன், கர்நாடகா வேளாண்துறை இணைந்து ஒருங்கிணைந்த சந்தை (unified market platform) முறையைக் கொண்டுவந்துள்ளது.

11,000 கிராமங்கள்,   22 லட்சம் விவசாயிகள், 17,000 கமிஷன் ஏஜென்டுகள்,  32,000 வர்த்தகப் பங்குதாரர்கள்,  157 சந்தைகள் ஆகியவற்றுடன் ஆண்டுக்கு சுமார் 40,000 கோடி ரூபாய்க்கு ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டுவருகிறது, ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனம். இன்று, கர்நாடகா மாநிலம் முழுக்க விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை உணவுப் பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், ரிலையன்ஸ் ஃபிரஷ் போன்ற தனியார் சங்கிலித் தொடர் நிறுவனங்களுக்கும் விற்பனை செய்துவருவது இந்த நிறுவனம்தான்.

இதே கர்நாடகா மாதிரியை நாடு முழுவதும் விரிவாக்கும் நோக்கத்திலேயே இருபத்தாறு மாநில வேளாண் அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார் மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங். ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் போலவே, NeML, ECO e MARKET, FRESH e MARKET, NCDFL E MARKET என்று  பல பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தனித்தனியே FPO-க்களை உருவாக்கிக் கொண்டு கார்ப்பரேட் சேவையில் வரிசைகட்டி நிற்கின்றன.

சமீபத்தில் மத்தியபிரதேஷ், மகாராட்டிரா மாநிலங்களில் விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, ‘‘ராஷ்ட்ரிய இ மார்க்கெட் சர்வீஸ் நிறுவனத்தால் வழக்கத்தைவிட கர்நாடக விவசாயிகள் 38 சதவீதம் அதிக லாபம் பெற்றிருப்பதாக” ஒரு பிரச்சாரத்தைக் கிளப்பிவிட்டது நிதி ஆயோக். பணவீக்கத்தைக் கணக்கில்கொண்டு பரிசீலித்தால், அது வெறும் 13 சதவீதம் மட்டுமே என்பது பின்னர் அம்பலமானது. இப்படித்தான், பொய்யான தகவல்களால் அல்லது சுற்றி வளைத்துச் சொல்லப்படும் உண்மைகளால் இதற்கான தீவிரப் பிரசாரம் நடைபெற்றுவருகிறது.

இ.சாப்பல் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் நேரடிக் கொள்முதலைப் பத்து ஆண்டு களுக்கு முன்னரே அறிமுகப்படுத்திய மாநிலம் மத்திய பிரதேசம். கமிஷன் மண்டிக் காரர்களைவிட கார்ப்பரேட்டுகள் அதிக விலை தருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள் அங்கே. இது பொய் என்று விரைவிலேயே வெளிப்பட்டது. மத்திய பிரதேசத்தில் இருபத்தொரு சந்தைகள் e-NAM உடன் இணைக்கப்பட்டுள்ளன. விலை வீழ்ச்சிக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட மாண்ட்சோர் சந்தையும் அவற்றில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

விளைபொருட்களுக்கு நியாயமான விலை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்பவைதான் விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கை. இருபத்தைந்து பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை என்று ஒன்றை அரசு நிர்ணயம் செய்தாலும், அரிசி, கோதுமை ஆகிய இரண்டை மட்டுமே கொள்முதல் செய்கிறது. இது நாடுமுழுவதும் நடக்கும் விவசாய கொள்முதலில் வெறும் ஆறு சதவீதம் மட்டுமே. மீதமுள்ள பொருட்களை விவசாயிகளிடமிருந்து படுமோசமான விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தாலும், அதனைத் தடுக்கவோ தண்டிக்கவோ மத்திய மாநில அரசுகள் சட்டம் எதுவும் இயற்றவில்லை.

மேலும், தேசிய மின்னணு சந்தையில் குறைந்தபட்ச விலைக்கு கீழே யாரும் விலை கேட்கக் கூடாது என்ற விதியெதுவும் இல்லை என்பது மட்டுமல்ல, சுதந்திர சந்தைக்கு எதிரானது என்பதால் குறைந்தபட்ச விலை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. அதிகரித்து வரும் இடுபொருள் செலவுகள் மற்றும் நவீன வேளாண் முறைகளுக்கு ஈடுகொடுக்க முடியாத நிலமைகளால் பெரும்பான்மையான சிறு விவசாயிகளின் சதவீத உற்பத்தி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

இதை FPO என்ற பெயரில் ஒன்றாகத் திரட்டி, சுதந்திரச் சந்தை முறைக்குள் கொண்டுவருவதன் மூலம், சிறு குறு விவசாயிகளை நிரந்தரமாக ஒழியும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் வேளாண் மின்னணுச் சந்தை ஆகியவை சிறு, குறு விவசாயிகளுக்கு நிஜமாகவே பயனுடையவையா என்றால் இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இப்படியான நெருக்கடியான சூழலில்தான் வாழ வழிகேட்டு டெல்லியில் குவிந்தனர் விவசாயிகள். அவர்களை வழக்கம்போல நம் அரசு கண்டுகொள்ளவில்லை.

ஊடகங்கங்களோ ஒரு நாள் பரபரப்பாய் அதைப் பதிவு செய்துவிட்டு அப்படியே மறந்தும்விட்டன. இந்த வார பாரம்பரிய நெல்லான குதிரைவால் சம்பா பற்றி இனிப் பார்போம். குதிரைவால் சம்பா தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் உள்ள செக்கணம் ஊராட்சிக்கு உட்பட்ட ‘கம்பளத்துப்பட்டி’ வட்டாரங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது என்கிறார்கள். ஏக்கருக்கு சுமார் ஒரு டன்னுக்கு மேல் மகசூல் கொடுக்கக் கூடியது குதிரைவால் சம்பா. நூற்று ஐம்பது நாட்களில் அறுவடைக்குத் தயாராகும் இது மத்தியகால மற்றும், நீண்டகால நெற்பயிர்கள் சாகுபடி செய்யக்கூடிய ஆகஸ்ட் மாதம் தொடங்கும் சம்பாப் பருவத்தில் பயிரிட ஏற்றது.

இந்தப் பருவத்திலேயே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்யவும் ஏற்றது. குதிரைவால் சம்பா நெற்பயிர்கள், பூச்சிகள் மற்றும் நோய்களை எதிர்க்கும் திறன் கொண்டது. இதன் பயிர்த்தண்டுகள் சாயும் தன்மையற்றவை. குதிரைவால் சம்பாவில் அயானிக் அளவிலான கார்போஹைட்ரேட் நுண்ணூட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தும். உடலுக்கு உடனடி எனர்ஜியைத் தரும். குழந்தைகள், உடல் வலுக் குறைந்தவர்கள் உண்ண ஏற்றது.

(செழிக்கும்)

- இளங்கோ கிருஷ்ணன்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: