சதம் அடித்தும் கோஹ்லிக்கு சோதனை பெர்த்தில் ஆஸி. ஆதிக்கம்

பெர்த்: பெர்த் டெஸ்ட்டின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. சதம் அடித்து ரன் வேட்டையாடிய விராத் கோஹ்லி, நடுவரின் சர்ச்சைக்குரிய தீர்ப்பால் ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது. இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி,  பெர்த் மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி, முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. கோஹ்லி (82), ரகானே (51) ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று துவங்கியதும், ரகானே விக்கெட்டை இந்தியா இழந்தது. கூடுதலாக ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் லியான் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த விஹாரி ஹேசல்வுட் பந்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் விடாப்பிடி உறுதியுடன் ரன்களை சேர்த்தார் கேப்டன் விராத் கோஹ்லி. பவுன்சர்கள் எகிறி வந்தும் பதற்றமின்றி ஆடிய அவர், ஆஸ்திரேலிய பந்து வீச்சை சுலபமாக கையாண்டு, டெஸ்ட் போட்டிகளில் தனது 25வது சதத்தை பூர்த்தி செய்தார். கம்மின்ஸ் வீசிய பந்தில் சர்ச்சைக்குரிய முறையில் கோஹ்லி ஆட்டமிழந்தார். அவர் 257 பந்துகளில் ஒரு சிக்சர், 13 பவுண்டரிகளுடன் 123 ரன்கள் எடுத்தார்.

அதன்பின் வந்தவர்கள் வந்த வேகத்தில் வெளியேற, இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 283 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. வேகத்துக்கு சாதகமான மைதானத்தில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்து வீச்சாளர் லியான் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, 43 ரன் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பிஞ்ச், ஹாரிஸ் நிதானமான துவக்கம் அளித்தனர். ஷமி வீசிய பந்தில் பிஞ்ச்சின் வலது கை ஆட்காட்டி விரலில் காயம் ஏற்படவே, அவர் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். தேனீர் இடைவேளை வரை அந்த அணி விக்கெட் எதையும் இழக்காமல் 33 ரன்கள் எடுத்திருந்தது. தேனீர் இடைவேளைக்குப் பின் இந்திய பவுலர்கள் ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.

பூம்ரா பந்தில் ஹாரிஸ் (20), ஷமி பந்து வீச்சில் மார்ஷ் (5), ஹெட் (19), இஷாந்த் சர்மா பந்தில் ஹேண்ட்ஸ்கம்ப் (13) வெளியேற, மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. முதல் இன்னிங்ஸ் லீடையும் சேர்த்து அந்த அணி இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆகவே, இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தில் மிகக்குறைந்த ரன்களில் ஆஸ்திரேலியாவை சுருட்டினால் மட்டுமே இந்தியா தனது ஆதிக்கத்தை தொடரமுடியும்.

தவறான தீர்ப்பும்... தொடரும் சோகமும்...

ஆட்டத்தின் 92வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் கடைசிப்பந்தை தட்ட முயன்றபோது, கோஹ்லியின் பேட்டில் பட்டு பந்து ஸ்லிப் திசைக்குச் சென்றது, அங்கு 2வது ஸ்லிப்பில் இருந்த ஹேண்ட்ஸ்கம்ப் தாவி பந்தை பிடித்தார். ஆஸ்திரேலிய பீல்டர்கள் அப்பீல் செய்ததும், கள நடுவர் குமார் தர்மசேனா அவுட் கொடுத்தார். ஆனால், இந்த கேட்ச் பிடித்ததில் சந்தேகம் இருந்ததைத் தொடர்ந்து மூன்றாவது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது.

மூன்றாவது நடுவர் நைல் லாங், டிவி ரீப்ளே மூலம் ஆய்வு செய்தனர். ரீப்ளே காட்சியில் பந்து தரையில் பட்டப் பிறகே ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் பிடித்தார் என்பது தெளிவாகத் தெரிந்தது. நன்றாக ஜூம் செய்து பார்த்தபோதும், பந்து தரையில் பட்டப் பிறகே கேட்ச் ஆவது தெரிந்தது. ஆனால், யாரும் எதிர்பாராத நிலையில், மூன்றாவது நடுவர் அவுட் அளிக்கவே, மிகுந்த அதிருப்தியுடனும், கோபத்துடனும் ஹெல்மெட்டை வீசி எறிந்த படி கோஹ்லி வெளியேறினார்.

ரசிகர்களும் கடும் ஏமாற்றமடைந்தனர். நடுவரின் தவறான தீர்ப்பு, இந்திய அணிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்தியது. அடுத்த ஐந்து விக்கெட்டுகள் வெறும் 32 ரன்களில் சரிந்தன. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணிக்கு பாதகமான தீர்ப்புகள் வழங்கப்படுவது இது முதல்முறை அல்ல. சச்சின் டெண்டுல்கர் இதுபோல பலமுறை தவறான நடுவர் தீர்ப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஞ்ச் சந்தேகம்

பிஞ்ச்சின் விரலில் ஏற்பட்ட காயம் சாதாரணமானது, எலும்பு முறிவு போன்ற பெரிதான காயமில்லை என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். ஆனாலும், அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கி பேட் செய்ய முடியுமா என்பது சந்தேகமே என கூறப்படுகிறது. பிஞ்ச் களமிறங்க முடியாத பட்சத்தில், அது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவாக அமையும்.

பிராட்மேனுக்கு பிறகு செம ஸ்பீடு

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 25 சதங்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இந்திய கேப்டன் விராத் கோஹ்லி பெற்றுள்ளார். நேற்று தனது 25வது சதத்தை 127 இன்னிங்ஸ்களில் (76வது போட்டி) அவர் எட்டியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றின் பிதாமகன் பிராட்மேன் 52 போட்டிகளில் (68 இன்னிங்ஸ்) 25 சதத்தை கடந்துள்ளார். இந்திய வீரர்களிடையே கோஹ்லிதான் நம்பர் 1. டெஸ்ட் கிரிக்கெட்டில் 25வது சதத்தை சச்சின் டெண்டுல்கள் 138வது இன்னிங்சிலும், சுனில் கவாஸ்கர் 130வது இன்னிங்சிலும் அடித்தனர்.

ஆஸ்திரேலிய மண்ணில் கோஹ்லி அடிக்கும் ஆறாவது சதம் இது. சச்சின் டெண்டுல்கரும் ஆஸ்திரேலிய மண்ணில் ஆறு சதம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய ஆடுகளத்தில் அதிக சதம் அடித்த வெளிநாட்டு வீரர் பட்டியலில் கோஹ்லி மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருக்கு முன் ஜாக் ஹாப்ஸ் (9 சதம்), வாலி ஹேமண்ட் (7 சதம்) உள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: