உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தங்கம் வென்று சாதித்தார் சிந்து சாம்பியன் ஆகும் முதல் இந்திய வீராங்கனை

குவாங்ஸூ: உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்து அசத்தியுள்ளார் பி.வி.சிந்து. நேற்று நடந்த விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின் நசோமி ஒகுஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார். சீனாவின் குவாங்ஸூ நகரில் உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் போட்டி நடந்தது. ஆண்டு இறுதி தரவரிசைப் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் வீரர், வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்பார்கள். உலக தரவரிசைப் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ள இந்தியாவின் பி.வி.சிந்து இந்தத் தொடரின் ஆரம்பம் முதலே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். லீக் சுற்றின் முதல் மூன்று ஆட்டங்களிலும் அவர் அபாரமாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில், தாய்லாந்தின் முன்னணி வீராங்கனையும், தரவரிசையில் எட்டாவது இடத்தில் இருப்பவருமான ரட்சனனோக் இன்டனானை 21-16, 25-23 என்ற நேர் செட்டுகளில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது முறையாக சிந்து முன்னேறினார். இறுதிப்போட்டியில், உலகத் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹராவை அவர் எதிர்த்து களமிறங்கினார். சர்வதேசப் போட்டிகளில் இருவரும் இதற்கு முன் 12 முறை சந்தித்துள்ளனர். இருவரும் தலா 6 போட்டிகளில் வென்று சமபலத்துடன் இருந்ததால், இறுதி ஆட்டம் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

உலகச் சாம்பியன் யார் என தீர்மானிக்கும் சிந்து, ஒகுஹரா இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் நேற்று நடந்தது. துவக்க வினாடி முதல் போட்டியை சிந்து முழுவதுமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். ஒகுஹராவுக்கு அதிக வாய்ப்புகள் வழங்காமல், ஆவேசமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். முதல் செட் அனல் பறந்தது. இந்த செட்டை 21-19 என்ற புள்ளிகளில் சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் ஒகுஹராவின் கை ஓங்கவிடாமல் பார்த்துக் கொண்டார். இந்த செட்டை 21-17 என்ற புள்ளிகளில் கைப்பற்றி, நேர் செட்டுகளில் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் சாம்பியன் பட்டம், தங்கப்பதக்கத்தை தன்வசமாக்கினார் 23 வயது இளம் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. உலக டூர் பைனல்ஸ் பேட்மின்டன் தொடரில் சாம்பியன் பட்டம் கைப்பற்றும் முதல் இந்திய வீராங்கனை என்ற புதிய வரலாறும் படைத்துள்ளார். இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடியிருந்தாலும், வெள்ளிப் பதக்கம் மட்டுமே கைப்பற்ற முடிந்திருந்தது. அந்த ஏமாற்றங்களுக்கு இம்முறை முற்றுப்புள்ளி வைத்து வரலாறு படைத்திருக்கிறார் சிந்து. சரித்திர சாதனை படைத்த சிந்துவுக்கு பல்வேறு தலைவர்களும், விளையாட்டு பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

‘பைனல் பற்றி இனி யாரும் விமர்சிக்க முடியாது’

* இறுதிப்போட்டிகளில் சிந்து சமீபகாலமாக தொடர் ஏமாற்றங்களையே சந்தித்து வந்தார். கடைசியாக அவர் பங்கேற்ற ஏழு இறுதிப்போட்டிகளிலும் தோல்வியே கிடைத்தது. அத்தனை ஏமாற்றங்களுக்கும் அழுத்தம் திருத்தமாக இம்முறை அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மறக்க முடியாத இந்த வெற்றி குறித்து அவர் கூறுகையில், ‘‘இறுதிப்போட்டிகளில் வெற்றி பெறாதவர் என இனி என்னை யாரும் கூறமுடியாது. இந்த வெற்றி எனக்கு மிகவும் விசேஷமானது,’’ என்றார்.

* கடந்த ஆண்டு நடந்த தொடரின் இறுதிப்போட்டிக்கும் சிந்து முன்னேறியிருந்தார். அப்போது ஜப்பான் வீராங்கனை அகேனி யாமகுசியிடம் அவர் தங்கத்தைத் தவறவிட்டார். இதற்குப் பழிக்குப்பழியாக இம்முறை ஜப்பான் வீராங்கனை நசோமி ஒகுஹராவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: