×

போலீஸ் சேனல்

பஞ்சாயத்து பேசியதால் வந்த வினை
சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிட கூடாது என நீதிமன்றமும், அரசும் எச்சரித்து இருந்தாலும் கூட, குமரி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் சிலர் சிவில் பிரச்னையில் தான் அதிக ஆர்வம்  காட்டுகிறார்களாம். எப்படி முடித்து கொடுத்தாலும் எளிதில் பெரிய தொகை கிடைத்து விடும் என்பதால், எப்பாடுபட்டாவது சிவில் வழக்கை முடித்து விட வேண்டும் என்பதுதான் அவர்களது இலக்காக உள்ளது. இப்படித்தான்  சமீபத்தில் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு காவல் நிலையத்தில் உறவினர்களுக்கு இடையே சொத்து பிரச்னை வந்துள்ளது. அதில் ஒருவருக்கு திருமணம் ஆக வில்லை. இருப்பினும் குடும்ப சொத்தை விட்டுக் கொடுக்க  முடியாது என அவர் கூற, இடையில் வந்த எஸ்.ஐ., குடும்பம் தான் கிடையாதே. உனக்கு எதற்கு சொத்து என கேட்க, காவல் நிலையத்தில் வைத்தே தகராறு முற்றி இருக்கிறது.

இதனால் அந்த நபரை எஸ்.ஐ.யிடம் மோதி விட்டார் என கூறி வழக்குபதிந்து கைது செய்தனர். இந்த சம்பவத்தில் இப்போது ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்து கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.  முதலிலேயே கோர்ட்டில் போய் பார்த்துக் கொள்ளுங்கள் என அனுப்பாமல், சிவில் பிரச்னையில் தலையிட்டதன் விளைவு, இப்படி ஆகி போச்சே என்று அந்த போலீஸ் நிலையத்தில் உள்ள அனைவரும் கதி கலங்கி  இருக்கிறார்களாம்.

எப்படித்தான் வேலை செய்ய?எஸ்ஐக்கள் எழுப்பும் கேள்வி
மலைக்கோட்டை மாநகரில் உள்ள காந்தி மார்க்கெட் பகுதியில் அடுத்தடுத்து குடியிருந்து வரும் துப்புரவு தொழிலாளி, இரும்பு வியாபாரி இடையே தகராறு இருந்து வந்தது. இதில் சமீபத்தில் ஏற்பட்ட தகராறு குறித்து  இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில் சிஎஸ்ஆர் போடப்பட்டு இருதரப்பினருக்கும் அறிவுரை கூறி அனுப்பப்பட்டனர். இதில் துப்புரவு தொழிலாளியின் மனைவி தன்னை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் வழக்குபதிந்த  போலீசார் இரும்பு வியாபாரியின் மகனை கைது செய்தனர். இதனால் மனவேதனையில் இருந்த இரும்பு வியாபாரி தனது சாவிற்கு இன்ஸ்பெக்டர், எஸ்ஐ காரணம் என கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து  கொண்டார்.

இதை தொடர்ந்து 2 போலீசார் மீது நடவடிக்ைக எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என கூறி உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற துணை கமிஷனர், நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று உடலை  பெற்று சென்றனர். இந்நிலையில் எஸ்ஐயை காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் இருந்து வாய்வழி உத்தரவாக விடுவித்து நடவடிக்கை எடுத்த துணை கமிஷனர் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டுவிட்டார்.  புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்து நீதியை நிலைநாட்டுவதில் சில குறுக்கீடு இருந்தாலும் எப்படி உண்மையாக வேலை செய்ய முடியும் என மாநகர எஸ்ஐக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எந்த வழக்கிற்கு என்ன நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் உயரதிகாரிகளிடம் கேட்டு நடக்க முடியுமா என அவர்கள் குமுறுகின்றனர்.

போலீஸ் அதிகாரிகளை இயக்கும் “ரைட்டர்கள்’’
நெல்லை மாநகரத்தில் பாளையங்கோட்டை, மேலப்பாளையம், டவுன், தச்சநல்லூர் உள்பட எட்டு சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்களும் மற்றும் மகளிர் காவல் நிலையங்கள், குற்றப்பிரிவு உள்பட பத்து காவல் நிலையங்கள்  உள்ளிட்ட 18 நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் ஏழு உதவி கமிஷனர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலும் ஒரு பிரிவை சேர்ந்த சிறப்பு எஸ்ஐக்கள் மற்றும் ஏட்டுக்களே தொடர்ந்து ரைட்டர்களாக  பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் ஒரு ஸ்டேஷனிலிருந்து வேறு ஸ்டேஷன்களுக்கு மாறுதலாகி சென்றாலும் கூட அங்கு ஏற்கனவே உள்ள ரைட்டரை வேறு டூட்டிக்கு மாற்றி விட்டு அந்த இடத்தை பிடித்துக்  கொள்கின்றனர்.

இவர்கள் அனைவரும் சங்கிலி தொடர் போல் உள்ளனர். இவர்கள் என்ன சொல்கிறார்களோ அதற்கு உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் தலையாட்டும் சூழ்நிலை உள்ளது. இதற்கு பக்கபலமாக  நெல்லையில் பல ஆண்டுகளுக்கு முன்பு பணியாற்றி தற்போது சென்னையில் உயரதிகாரியாக பணியாற்றும் அதிகாரிகளின் ஆசியும் உள்ளது. இதனால் வழக்குகளை பதிவு செய்வது கூட இவர்களின் கையில் தான் உள்ளதாக  உடன் பணியாற்றும் அதிகாரிகளும் போலீசாரும் முனுமுனுக்கின்றனர்.

சாமிகளிடமே ‘வசூல்’ பார்க்கும் போலீசார்
ஐயப்ப பக்தர்கள் சீசன் துவங்கி விட்டது. திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வாகனங்களில் வருகின்றனர். இப்படி வரும்  வாகனங்களை, நகர் எல்லைகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளில் இருக்கும் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர்.  புது தாராபுரம் சாலை, கொடைக்கானல் சாலை, உடுமலை தேசிய நெடுஞ்சாலை, திண்டுக்கல் தேசிய  நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் உள்ள  சோதனைச்சாவடிகளில், போலீசார் நிறுத்தும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்களிடம் ஏதாவது காரணத்தைச் சொல்லி, ‘செம வசூல் வேட்டை’ நடத்தி வருகின்றனராம்.

தினமும் இந்த வசூலில் நல்ல வருவாய் கிடைப்பதால், சோதனைச்சாவடி டூட்டிக்கு செல்வதில், ஸ்டேஷனில் இருக்கும் போலீசாரிடம் போட்டா போட்டி ஏற்பட்டுள்ளதாம்.‘ஒரே நபரை திரும்ப திரும்ப அனுப்பி, சம்பாதிக்க  விடாதீர்கள். எங்களையும் அனுப்புங்கள்’ என்று ‘ஒப்பன் டாக்’காகவே போலீசார் அதிகாரிகளிடம் பணிப்பகிர்வை சண்டையிட்டு கேட்டு வாங்குகிறார்களாம். மாலையிட்டு, விரதமிருந்து பயணம் வருகிற ஐயப்ப பக்தர்கள் இந்த  ‘போலீஸ் வசூலை நிறுத்த வேண்டும்’ என்று புலம்புகிறார்களாம்.

இடமாறுதலில் வந்த உயர் பெண் அதிகாரிஎஸ்கேப் ஆக முயற்சி
மாங்கனி மாநகர குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவுக்கு டி.சி.,யாக சென்னையில் பணியாற்றிய பெண் அதிகாரி ஒருவரை அறிவிச்சாங்க. அவங்க அறிவிப்பு வெளியாகி 45 நாட்களாகியும் டூட்டிக்கு வந்து ஜாயின்ட் ஆகாம  இருந்தாங்க. அப்புறம் திடீரென ஒரு நாள் வந்து பொறுப்ப ஏத்துக்கிட்டாங்க. இப்படி பொறுப்பேற்று ஒரு மாசமாகியும் பெருநகரில் இருந்த இன்வால்மென்ட் மாங்கனி நகரில் இல்லையாம். வந்தது முதலே இங்கிருந்து எப்படியாவது  எஸ்கேப் ஆகனும் என்று காய் நகர்த்துகிறாராம் அந்த பெண் அதிகாரி. இதற்காக மேலதிகாரிகள் முதல், ஆளுங்கட்சி பிரமுகர்கள் வரை பட்டியலிட்டு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம். இப்படி அதிகாரி இன்வால்வ்மென்ட்  இல்லாமல் இருப்பதால் சிட்டியில் போக்குவரத்து பிரச்னைகளும் அதிகமாகிக்கிட்டே வருதாம்.

இது அதிகாரிக்கு மேலும் தலைவலியாக உள்ளதாம். இதனால் இடமாறுதலுக்கான அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவும் பிளான் பண்ணியிருக்காராம். இப்படி வருகிற ஒவ்வொருவரும் அவங்க சிச்சுவேஷனையே  பாத்துக்கிட்டிருந்தா, சிட்டியில் இருக்கிற பிரச்னைகளை எப்படி சமாளிக்கிறது என்று கேள்வி எழுப்புகின்றனர் நேர்மையான காக்கிகள்.

வெளுத்து வாங்கும் வெள்ளை சட்டைக்காரன்...!
 ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணிபுரியும் ஆய்வாளர் முதல் கடைநிலை காவலர் வரை மாமூல் வசூலிப்பதில் படு உஷார். வசூலிக்கோனும்... ஆனா சிக்கிடாம வசூலிக்கோனும்... இதுதான் இவர்களது பாலிசி.  இக்காவல்நிலையத்துக்கு வரும் புகார் மனு அடிப்படையில், குற்றம்சாட்டப்பட்ட நபரின் பொருளாதார நிலைக்கு ஏற்ப, வசூல் கொட்டுகிறது. காக்கிகள் யாருமே நேரடியாக களத்தில் இறங்குவது இல்லை. இதற்கு பதிலா ஒரு  வெள்ளைச்சட்டைக்காரர் ஒருவரை பினாமியாக நியமித்துள்ளனர். அவர், அடிக்கடி இக்காவல்நிலையம் வந்து, போகிறார். எதிரேவும் நடமாடுகிறார்.

புகார்தாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்ட நபர்கள், இந்த வெள்ளைச்சட்டைக்காரனை கரெக்ட் பன்னி, கொடுக்க வேண்டியதை கொடுத்தால்தான் காரியம் நடக்கும். ‘’அதோ தெரியராரு... பாரு... அவரைப்போய் பாரு... அவர் கேட்கிறத  கொடு.... எல்லாம் தானாக நடக்கும்... நீதி கிடைக்கும்...’’ இதுதான் இங்குள்ள மகளிர் போலீசாரின் அட்வைஸ். ஒவ்வொரு நாளும் இரவில் அந்த வெள்ளைச்சட்டைக்காரன், ஆய்வாளரிடம் நேரில் ஆஜராகி, கணக்கு-வழக்குகளை  முறையாக சமர்ப்பித்துவிட்டு, தனக்குரிய கமிஷனையும் பெற்றுக்கொண்டு நடையை கட்டிவிடுகிறார். இதில நல்ல அனுபவம் பெற்ற இவர், பல நேரங்களில், இவரே நேரடியாக களத்தில் இறங்கிவிடுகிறார்.

திருப்பத்தூரில் கொடிகட்டி பறக்கும் காட்டன் சூதாட்டம்
திருப்பத்தூர் பகுதிகளில் காட்டன் சூதாட்டம், மூணு சூதாட்டம் கொடி கட்டி பறக்கிறது. காலம், காலமாக நடந்து வரும் இந்த சூதாட்டத்தால் ஏழை, எளிய கூலித்தொழிலாளர்கள், பீடித்தொழிலாளர்கள் கடுமையாக  பாதிக்கப்படுகின்றனர். இதற்காக உள்ளூர் போலீசின் அதிகார மட்டம் தொடங்கி கடைநிலை வரை மாதாந்திர மாமூல் பாய்கிறதாம். கடந்த ஆண்டுகளிலும் இந்த நிலை இருந்தாலும் உயர்அதிகாரிகளுக்கு கணக்கு  காட்டுவதற்காகவே மாதந்தோறும் ஓரிரு வழக்குகள் போடப்படுமாம். ஆனால், இந்த ஆண்டு ஒரு வழக்கு கூட திருப்பத்தூரில் போடவில்லையாம். இதில் சமீபத்தில் பொறுப்பேற்ற பெண் அதிகாரியை ஸ்டேஷன் காக்கிகள் யாரும்  மதிப்பதே இல்லையாம். இந்த விஷயம் அறிந்து தெருவோர வியாபாரிகள் கூட அவரை ரோட்டில் சென்றால் கண்டு கொள்வதில்லையாம்.

மாமூல் வருதா பாரு... இல்லேன்னா ரூட்ட மாத்து...!
கோவை சூலூர் காவல் எல்லைக்குள் வழிப்பறி, திருட்டு, கொள்ளை என குற்றச்செயல் நடந்தால், போலீசார் உடனுக்குடன் வழக்கு பதிவுசெய்வது இல்லை. மாறாக, குற்றவாளிகள் சிக்கினால் மட்டுமே வழக்கு பதிவுசெய்கின்றனர்.  ஏன்? என விசாரித்தபோது, ஏற்கனவே வழக்கு பதிவுசெய்த வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 300 பவுனுக்கும் அதிகமாக நகையை மீட்டுக்கொடுக்க வேண்டியுள்ளது. இதில வேற, மேலே மேலே ஏத்திக்கிட்டே போனா  நாங்க எங்க போறது... என போலீசார் புலம்புகின்றனர். நீதிபதி மனைவியிடம் செயின் பறித்தது, வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளை, வாத்தியார் வீட்டில் திருட்டு என முக்கிய வழக்குகளை மட்டும் பதிவுசெய்துள்ளனர். அதுவும்,  மேலிடத்து பிரஷ்ஷர் காரணமாகவே இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

போலீசாரின் ரெக்கவரி ரேட் குறைந்துகொண்டே போவதால் சமீப காலத்தில் இக்காவல்நிலைய ஆய்வாளர்கள் 3 பேர் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். வழிப்பறி, திருட்டு, கொள்ளை வழக்கில் பின்வாங்கும்  ேபாலீசார் சாலைவிபத்து வழக்கில் மட்டும் அவசரம் அவசரமாக வழக்கு பதிவுசெய்கிறார்கள். காரணம், இதிலதான் கேட்காமலேயே நிறைய கிடைக்குது... அதனால, மாமூல் வந்தா பாரு... இல்லேன்னா பேசாம ரூட்ட மாத்து....  என இங்குள்ள போலீசார் ரொம்ப விவரமாக செயல்படுகின்றனர். கண்காணிக்க வேண்டிய ஆய்வாளரே அடங்கிப்போய்விட்டார் என்பதுதான் ஹைலைட்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police channel
× RELATED பிரபல நிறுவனங்கள் தயாரிக்கும்...