ஏடிஎம்களுக்கு மூடுவிழா? : மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி: ஒரு லட்சம் ஏடிஎம்களை மூட திட்டமிடப்படுகிறதா? இல்லை என்று சொல்கிறார் மத்திய அமைச்சர் பிரசாத் சுக்லா. ஏடிஎம் தொழில் கூட்டமைப்பு சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. ஏடிஎம்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி காலத்துக்கேற்ற தொழில்நுட்ப, பாதுகாப்பு மாற்றங்களை செய்யாமல்  ஏடிஎம்களை  தொடர்ந்து செயல்படுத்த  முடியாது. அதனால் அடுத்தாண்டு மொத்தமுள்ள 2.38 லட்சம் ஏடிஎம்களில் பாதிக்கு மேல் மூட அரசு திட்டம் தீட்டி வருகிறது. மேலும் ஏடிஎம்கள் பராமரிப்பு, பாதுகாப்பு செலவுகள் அதிகமாக உள்ளதால் அரசுக்கு நிதி வருவாய் குறைகிறது என்பதும் ஒரு முக்கிய காரணம் என்று கூட்டமைப்பு அறிக்கையில் கூறியிருந்தது.

அரசு வங்கிகளின் ஏடிஎம்களில் தான் மக்கள் பலரும் பணம் எடுத்து வருகின்றனர். அப்படிப்பட்ட நிலையில், ஏடிஎம்களை மூடும் நிலை  ஏற்பட்டால் பாதிக்கப்படுவது நடுத்தர மக்கள் தான்.

இது குறித்து நாடாளுமன்றத்தில் நிதித்துறை இணை அமைச்சர் சிவ பிரசாத் சுக்லா கூறுகையில்,‘ ஏடிஎம்களை மூடும் எந்த திட்டமும் இப்போது அரசிடம் இல்லை. அப்படி ஒரு எண்ணமும் இல்லை. அரசின் சார்பில் இயங்கும் வணிக வங்கிகள், நிதி வங்கிகள், பண பட்டுவாடா வங்கிகள் என்று பல வங்கிகளுக்கும் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் எக்காரணத்தைக் கொண்டும் ஏடிஎம்கள் எதுவும் மூடப்படாது. நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஏடிஎம்கள் நவீனப்படுத்தப்படும்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: