×

மாநிலங்களின் ஒருமித்த கருத்து உருவாகும்வரை அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர நடவடிக்கை கூடாது: பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம்

சென்னை: அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா விஷயத்தில் மாநிலங்களின் ஒருமித்த கருத்து  உருவாகும்வரை அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது: அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதா-2018 குறித்த விஷயத்தில் அனைத்து மாநிலங்களுடனும் கலந்து பேசி, அதில் மாநிலங்களின் ஒருமித்த கருத்து உருவாகும்வரை அணைகள் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வரக்கூடாது என்று ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தேன். இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் 26ம் தேதி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இதுவரை தமிழக அரசின் கோரிக்கைகள் எதையும் மத்திய அரசு தீர்க்கவில்லை.

ஆனால் தற்போது எந்த மாநில அரசின் கருத்தையும் ஆலோசனையையும் கேட்காமல் பாராளுமன்றத்தில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்துக்கு ஒரு அணை சொந்தமாக இருந்தாலும், அது வேறு மாநிலத்தில் இருந்தால், அந்த அணையின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான உரிமையை அணைக்கு சொந்தமான மாநிலம் பெற முடியாது. முல்லை பெரியாறு, பரம்பிக்குளம், துனக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகள் தமிழ்நாட்டுக்கு சொந்தமானவை. அவை அருகில் உள்ள மாநிலங்களில் அமைந்துள்ளன. என்றாலும், மாநிலங்களுக்கு இடையேயான ஒப்பந்தங்களின் அடிப்படையில் அந்த அணைகளை தமிழக அரசுதான் பராமரித்து இயக்கி வருகிறது.

இந்த சூழ்நிலையில், அந்த 4 அணைகளின் பாதுகாப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு இருக்கும் உரிமையை மறுத்து, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்துக்கு அவற்றின் மீது அதிகாரத்தை அளிப்பது, தமிழக அரசின் உரிமைகளில் தலையிடுவது போன்றது. இது அரசியல் சாசனத்துக்கு முரணானது. அதுமட்டுமல்ல, நமது அரசியல் சாசனம் வகுத்து தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தையும் மீறுவதாக அமைகிறது. எனவே அடுத்த மாநிலத்தில் இருந்தாலும்கூட, அந்த அணைக்கு சொந்தமான மாநிலமே அவற்றை மாநில அணைகள் பாதுகாப்பு அமைப்பின் மூலம் சட்ட ரீதியாக சொந்தமாகக் கொண்டு, கட்டுப்படுத்தி இயக்கி பராமரிப்பதை உறுதி செய்யும் வகையில் ஷரத்தில் முறையான திருத்தம் கொண்டு வர வேண்டும். அதில் புதிய துணை ஷரத்தை சேர்ப்பதற்கு தமிழக அரசு ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது.

அதாவது, அணைகளை சொந்தமாக கொண்டிருக்கும் மாநிலத்தின் அலுவலர்கள், அந்த அணைகளின் பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்காக அவை இருக்கும் மாநிலங்களின் வன பகுதிக்குள் செல்ல உரிமை அளிக்கப்படுகிறது என்ற துணை ஷரத்தை அந்த மசோதாவில் சேர்க்க வேண்டும். கடந்த 12ம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மசோதாவில் இந்த கருத்து இடம் பெறவில்லை. எனவே அந்த மசோதாவை திரும்ப பெறுவதற்கு மத்திய நீர்வள துறையை நீங்கள் அறிவுறுத்த வேண்டும். அதோடு, மற்ற மாநிலங்களின் ஒருமித்த கருத்தையும், தமிழகத்தின் நியாயமான கவலைகளையும் தீர்க்காமல், அந்த சட்ட மசோதாவை சட்டமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கூடாது. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Oommen Chandy ,states , Dams Safety Act, the Prime Minister, Chief Edappadi, Letter
× RELATED அமித்ஷாவா.. சந்தான பாரதியா? மக்களை குழப்பும் பாஜவினரின் போஸ்டர்