×

குட்கா விவகாரத்தில் திடீர் திருப்பம் அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணாவுக்கு சிபிஐ சம்மன்: இன்று ஆஜராக உத்தரவு

சென்னை: குட்கா விவகாரத்தில் திடீர் திருப்பமாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. இது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் இயங்கி வந்த குட்கா குடோனில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, உரிமையாளர் மாதவராவின் அறையில் இருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டது.  அதில், அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர், 2 இணை கமிஷனர்கள், ஒரு துணை கமிஷனர், ஒரு உதவி கமிஷனர் மற்றும் சுகாதாரத்துறை, சுங்கத்துறை, உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஒவ்வொரு மாதமும் மாமூல் கொடுத்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை தவிர தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் தனியாக சிறப்பு மாமூலும் கொடுத்துள்ளதும் தெரியவந்தது.

இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் எழுதியது. ஆனால் அந்த கடிதத்தை காணவில்லை என்று தமிழக அரசு மறுத்தது. பின்னர் சசிகலா அறையில் சில மாதங்களுக்கு முன்னர் வருமான வரித்துறை சோதனை நடத்தியபோது, அந்த கடிதம் சிக்கியது. இவ்வாறு பல மர்ம முடிச்சுகள் கொண்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சில நாட்களுக்கு முன் இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ டிஐஜி சின்கா, எஸ்பி கண்ணன் ஆகியோர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். இதனால் குட்கா வழக்கை முடக்க சதி நடப்பதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்த வழக்கில் குட்கா தொழிற்சாலை உரிமையாளர்கள் மாதவராவ், சீனிவாச ராவ் குப்தா மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன், சிவக்குமார் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.  இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனிடம் கடந்த 7ம் தேதி மற்றும் 10ம் தேதிகளில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, மாதவராவிடம் அமைச்சருக்காக என்று சொல்லி, சரவணன்தான் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவரிடம் விசாரித்தனர். இந்த விசாரணையை தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு இன்று பிற்பகலில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த சம்மன், கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சரின் வீட்டில் வழங்கப்பட்டது.

அதேபோல, கடந்த அதிமுக ஆட்சியின்போது வணிகவரித்துறை அமைச்சராக இருந்த ரமணாவுக்கும் குட்கா ஊழலில் தொடர்பு இருப்பதாக மாதவராவ் வாக்குமூலம் அளித்திருந்தார். அதை தொடர்ந்து, அவரது வீட்டிலும் சோதனை நடந்தது. இதனால் ரமணாவும் இன்று பிற்பகலில் சிபிஐ அதிகாரிகள் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், குட்கா விவகாரத்தில் தற்போதைய டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளிலும் சோதனை நடந்தது. இதனால் விரைவில் இவர்களிடமும் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் 2 இணை கமிஷனர்களிடமும் விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : minister ,India ,Ramana , Wijepaskar, former minister of India, Ramana to be summoned in Gudka
× RELATED வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன்...