×

நிலையாக நெஞ்சில், சிலையாக அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் திரளாக பங்கேற்க திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை: கலைஞர் சிலை திறப்பு விழாவில் திரளானவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  வார்த்தைகளில் அடக்கி விட முடியாது கலைஞரின் தனிப்பெரும் வரலாற்றை. வடிவங்கள் என்னென்ன உண்டோ அத்தனையிலும் அவரது பெருமைகளை எடுத்துக் கூறினாலும் மேலும் ஏராளமானவை எஞ்சியிருக்கும். இந்தியத் துணைக் கண்டம் இதுகாறும் கண்டிராத ஈடு இணையற்ற தனித்துவமான தலைவர். தமிழினத்தின் தலைவர்  முத்தமிழறிஞர் 80 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் அரை நூற்றாண்டுக்காலம் தமிழ்நாட்டின் அரசியலை தன் விரலசைவுக்கேற்ப விசையேற்றிச் சுற்றிச் சுழல வைத்தவர் இந்திய அரசியலில் இக்கட்டுகள் ஏற்பட்டபோதெல்லாம் தன் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தால் ஜனநாயகத்தை நிலைநாட்டியவர் பல குடியரசுத் தலைவர்களையும் பல பிரதமர்களையும் உருவாக்கியவர்.

 13 சட்டப்பேரவைத் தேர்தல்களை எதிர்கொண்டு தோல்வியே காணாமல் வெற்றிகளைக் குவித்து சரித்திரம் படைத்தவர். தமிழ்நாட்டின் முதல்வராக 5 முறை பொறுப்பேற்று 19 ஆண்டுகள் ஆட்சி செய்து, இந்தியாவுக்கே முன் னோடியான திட்டங்களை உருவாக்கித் தந்தவர். பெருமைமிக்க தலைவருக்கு அவரின் உடன்பிறப்புகளான நாம் செலுத்தும் நன்றிக்கடன்தான் அண்ணா அறிவாலயத்தில் திறக்கப்படவிருக்கின்ற திருவுருவச் சிலை. சிற்பி தீனதயாளனும், அவர் குழுவினரும் ஓயாது உழைத்து உருவாக்கியுள்ள உயிர்த்துடிப்புமிக்க சிலை. திமுகவை கட்டிக்காக்கும் அந்தத் தலைவருக்குத் துணை நிற்பதே நம் தொண்டு என்ற உணர்வு உடன்பிறப்புகளின் நெஞ்சில் ஊற்றெடுக்கும். அவர்களின் கரங்கள் இருவண்ணக் கொடியை எப்போதும் உயர்த்திப் பிடிக்கும். அந்த உணர்வின் பெருவெளிப்பாடுதான்  சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்ரமணியன். செயல்பாட்டால் அறிவாலயம் வாசலில் 114 அடி உயர கொடிக்கம்பத்தில் உயர்ந்து பறக்கிறது இருவண்ணக் கொடி.

சிலை திறப்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், கலைஞரை தந்தை நிலையில் மனதில் வைத்துப் போற்றும் .சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பங்கேற்று நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர். அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெறும் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறவிருக்கிறது. அதன் ஏற்பாடுகளை சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் கவனித்து வருகிறார்.  தொண்டர்கள் ஆர்வமிகுதியால் அறிவாலயம் முன்பு கூடுவதைத் தவிர்த்து, ராயப்பேட்டை ஒய்.எம். சி.ஏ. திடலில் அணிஅணியாய்த் திரள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கட்டுப்பாடு காப்போம். அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். தலைவர் கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.  சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, தலைவர் கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற  முற்போக்கு  சமூகநீதி -ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும். அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். மக்களின் மனநிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும் அதனை உணரத் தொடங்கியிருப்பதால்தான் கொள்ளைக்கூட்டத்தாரிடமிருந்து தப்பி வந்து, கொள்கைக் கோட்டையாம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை ஒப்படைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

 திமுகவின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது. அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து -கட்டுப்பாடு காத்து - ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே சிலையாக உயர்ந்து நிற்கும் தலைவர் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு - காட்டுகின்ற நன்றி - செலுத்துகின்ற காணிக்கை. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,Karunanidhi ,opening ceremony , MK Stalin,DMK,Karunanidhi statue
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...