×

8 வழி சாலை திட்டத்தை எதிர்த்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளிவைப்பு

சென்னை: சென்னை - சேலம் 8 வழி சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.  சென்னையிலிருந்து சேலத்திற்கு 3 மணி நேரத்தில் செல்லும் வகையில் 8 வழிச்சாலையை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டம் வகுத்தது. இந்த திட்டத்துக்கு தடை விதிக்க கோரியும், திட்டத்தை ரத்து செய்யக் கோரியும் வக்கீல்கள் ஏ.பி.சூரியப்பிரகாசம், வி.பாலு உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குகளைத் தொடர்ந்தனர். பின்னர், 5 மாவட்ட விவசாயிகள், தருமபுரி  எம்.பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் தனித்தனியாக வழக்குகளைத் தொடர்ந்தனர்.

 இந்த வழக்கு கடந்த 6 மாதங்களாக நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த திட்டத்திற்காக 5 மாவட்டங்களிலும் நிலங்களை கையகப்படுத்த தடை விதித்து ஒரு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தனர். வழக்கு விசாரணையின்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான உதவி சொலிசிட்டர் ஜெனரல் கார்த்திகேயன் வாதிடும்போது, இந்த திட்டத்திற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் இத்திட்டத்தை தொடர மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்தார்.

தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு பிளீடர் திருமாறன் ஆஜராகி, விதிகளுக்கு உட்பட்டே நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெறுகிறது என்று வாதிட்டார்.  இதற்கிடையில், திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய  பொது மக்கள் துன்புறுத்தப்பட்டது குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.  சிபிசிஐடி எஸ்.பி பிரவிண் குமார் மேற்பார்வையில் டி.எஸ்.பி முருகவேல் விசாரணை நடத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். விசாரணை அறிக்கையை ஜனவரி 25ம் தேதிக்குள்  தாக்கல் ெசய்யவும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. நேற்று காலை முதல் மாலை வரை விசாரணை தொடர்ந்து நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கிறோம். ஜனவரி 4ம் தேதிக்குள் மனுதாரர்கள் மற்றும் மத்திய, மாநில அரசுகள் எழுத்துப்பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்யலாம் என்று உத்தரவிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court , 8 way road, high court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...