×

வண்டலூர் பூங்கா இயக்குநர் அதிரடி இடமாற்றம்: நெடுங்குன்றம் ஏரியில் முதலைகளை மீட்பதில் சிக்கல்

சென்னை: நெடுங்குன்றம் ஏரியில் உள்ள முதலைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநரை தமிழக அரசு அதிரடியாக இடமாற்றம் செய்துள்ளது. முதலை விவகாரத்தால் பூங்கா இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டாரா என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.  வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். நெடுங்குன்றத்தில் உள்ள பெரிய ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஏரி வண்டலூர் உயிரியல் பூங்கா பின்புறம் அமைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 11.30 மணி அளவில் அப்பகுதி பெண்கள் பெரிய ஏரிக்கு துணி துவைக்கச் சென்றனர். அப்போது கற்கள் மீது 2 முதலைகள் படுத்திருப்பதை கண்டு பெண்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும், அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். ஏரியில் மீன் பிடிப்பவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’இந்த ஏரியில் பல ஆண்டுகளாக அடிக்கடி இது போன்று முதலைகள் இருப்பதை கண்டு வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு தகவல் கொடுப்போம். பின்னர் பூங்கா நிர்வாகத்தினர் வந்து முதலைகளை பிடித்துச் செல்வது வழக்கம். இதுவரை 5க்கும் மேற்பட்ட முதலைகளை பிடித்துள்ளனர். பிடிபட்ட முதலைகள், ஏரியில் குஞ்சு பொறித்ததால் ஏரியில் அதிகமாகி வருகிறதா அல்லது 2015, 2016ம் ஆண்டுகளில் வர்தா புயல் போன்ற கன மழையின் போது பூங்காவின் மதில் சுவர்கள் இடிந்து விழுந்தும், ஏராளமான மரங்கள் வேறோடு சாய்ந்தும், பூங்கா சின்னாபின்னமானது.

அப்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி வந்த முதலைகளா இவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் தற்போது 10க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து தாம்பரத்தில் உள்ள வனத்துறையினருக்கும், பூங்கா நிர்வாகத்தினருக்கும் தகவல் கொடுத்தோம். நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு விரைந்து வந்த தாம்பரம் வனத்துறை ஊழியர்கள் பார்வையிட்டனர். அப்போது 2 முதலைகளில் ஒரு முதலை தண்ணீரில் நீந்தியபடியும் மற்றொரு முதலை பாறை மீது அமர்ந்தும் காணப்பட்டது’’ என்றனர்.

இது குறித்து வனத்துறை ஊழியர் ஒருவர் கூறுகையில், ‘’நெடுங்குன்றம் ஏரியில் இது போன்று முதலைகள் பிடிபடுவது வழக்கம். ஆனால் இந்த முதலைகளை ஏரியில் தண்ணீர் இருப்பதால் பிடிக்க முடியவில்லை. தண்ணீர் வற்றினால் தான் பிடிக்க முடியும்–்’’ என்றார். இந்நிலையில், தாம்பரத்தில் உள்ள வனத்துறை அலுவலர்கள் நேற்று காலை 11 மணிக்கு நெடுங்குன்றம் ஊராட்சிக்கு வந்தனர். அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மக்களை சந்தித்து முதலை இருப்பது பற்றி மனு கொடுக்கும்படி கேட்டனர். ஆனால் யாரும் மனு கொடுக்க முன்வரவில்லை. இதனால் பெரிய ஏரியில் உள்ள முதலைகளை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 இதற்கிடையில், வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த யுவராஜ் சென்னையில் உள்ள பனகல் மாளிகைக்கு இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் திருச்சியில் தலைமை வன பாதுகாவலராக பணியாற்றி வந்த யோகேஷ்சிங் என்பவரை வண்டலூர் பூங்காவுக்கு இயக்குநராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vandaloor ,Long Island , Vandalur Park Director, Transfer, Nedungundam Lake, Crocodiles
× RELATED அடுத்த மாதம் 24ம் தேதி வரை வண்டலூர்...