×

ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த 94 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

சென்னை: அமைந்தகரையில் உள்ள பெரியகூடல் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 1.04 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதுதொடர்பாக நடத்திய ஆய்வில் பிரிவரீஸ் அன்கோ என்ற நிறுவனம் மாநகராட்சி நிலத்தை போலி ஆவணங்கள் சமர்பித்து, பட்டா பெற்றது தெரியவந்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட ஆட்சியர், அந்த பட்டாவை ரத்து செய்து நிலத்தை மாநகராட்சி பெயரில் பட்டா மாறுதல் செய்ய, கடந்த 2001ம் ஆண்டு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தேவராஜ் உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், பட்டா மாறுதல் தொடர்பான மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, நிலத்தை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை எதிர்த்து மாநகராட்சி ஆணையர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று தீர்ப்பளித்தனர். இதை எதிர்த்த மனுதாரர்கள் மூவரும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த நிலம் மாநகராட்சிக்கு சொந்தமானது தான் என்று தீர்ப்பளித்தது. மேலும் நிலத்தை காலி செய்து, ஓராண்டுக்குள் மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என மனுதாரர்களுக்கு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த நிலத்தை மீட்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டு, இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று அறிவிப்பு பலகை வைத்தனர். இதன் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 94 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர். 1 கோடி நிலம் மீட்பு:  அலமாதி கிராமத்தில் சோழவரம் ஏரியின் பின்புற பகுதியில் உள்ள சுமார் 75 சென்ட் புறம்போக்கு நிலத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து சுற்றுச்சுவர் அமைத்து இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், பொன்னேரி துணை வட்டாட்சியர் அருள்வளவன், சோழவரம் வருவாய் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் நேற்று சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர், அங்கு அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு 1 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government ,Operating Officers , Government, Land Recovery
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...