மலேசியாவில் இருந்து விமானம் மூலம் செருப்பில் கடத்திவரப்பட்ட 10 லட்சம் தங்கம் பறிமுதல்

மீனம்பாக்கம்: மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில், செருப்பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 10 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு 11.40 மணிக்கு பேட்ரிக் ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம் சென்னை வந்தது. அதில் வந்த பணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சென்னையை சேர்ந்த முகமது உசேன் (24), சுற்றுலா பயணியாக மலேசியா சென்று திரும்பினார். அவரது உடமைகளை சோதனை செய்தபோது எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவர், சோதனை முடிந்துவிட்டதே, நான் போகிறேன் என அவசரப்பட்டார்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, முழுவதுமாக சோதனை செய்தனர். அப்படியும் எதுவும் சிக்கவில்லை. அந்த நேரத்திலும், வாலிபர் பதற்றத்துடன் காணப்பட்டார். எனவே, அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்பட்டது. பின்னர், அவரது செருப்பை கழற்றி சோதனையிட்டனர். அதன் அடிபாகத்தை முழுவதுமாக பிரித்து பாத்தபோது எதுவும் இல்லை. ஆனால், மேல்பகுதி கனமாக இருந்தது. இதையடுத்து அதை கிழித்து பார்த்தபோது 2 செருப்பிலும் தலா 150 கிராம் கொண்ட ஒரு தங்ககட்டி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அதிகாரிகள் 2 தங்க கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 10 லட்சம். பின்னர், தங்கத்தை கடத்தி வந்த வாலிபர் முகமது உசேனை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: