டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி சட்ட பல்கலை மாணவர்கள் திடீர் முற்றுகை போராட்டம்: தரமணியில் பரபரப்பு

தரமணி: தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி சட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவியர் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தரமணி எம்ஜிஆர் சாலை, தந்தை பெரியார் நகரில் கடந்த அக்டோபர் மாதம் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த கடை ரயில் நிலையம் அருகிலும், டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்லைக்கழகம் அருகிலும் அமைந்துள்ளது.  மேலும் எதிரே சென்னை பல்கலைக்கழக மாணவர் விடுதியும் உள்ளது. இதையொட்டி தந்தை பெரியார் நகர் குடியிருப்பு பகுதியும் உள்ளது. இங்கு வரும் குடிமகன்களால் பொதுமக்களும், மாணவ மாணவியரும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும் ரயில் நிலையம் அருகில் போதை ஆசாமிகள் திரிவதால் பெண் பயணிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, இந்த டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி தரமணியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக மாணவ, மாணவியர் சுமார் 100க்கும் மேற்பட்ேடார் நேற்று பகல் 12 மணி அளவில்  டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது, டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த தரமணி காவல் நிலைய போலீசார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாஸ்மாக் கடை மூடுவது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கிறோம் என கூறியதை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: