அரசு கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை

சென்னை: அரசு தோட்டக் கலை கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் மர்மம் உள்ளதாக தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் மாதவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வடக்கு பாளையம் முஷ்ணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், விவசாயி. இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள். விவசாய தொழில் பாதிக்கப்பட்டதால், கடந்த ஆண்டு முத்துகிருஷ்ணன் சென்னை வந்தார். மாதவரம் மண்டலத்துக்கு உட்பட்ட அருள் நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவில் தங்கி, ஒப்பந்த அடிப்படையில் தோட்ட பணிகளை செய்து வருகிறார். இவரது 2 மகள்களும், கடலூரில் படித்து முடித்தனர்.

இதையடுத்து மூத்த மகள் செண்பகா தேவியை (17), சென்னைக்கு அழைத்து வந்தார். அவருக்கு தோட்டக் கலையில் ஆர்வம் இருந்ததால், மாதவரம் பால்பண்ணை பகுதியில் உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில் சேர்த்தார். அங்கு, செண்பகா தேவி முதலாமாண்டு படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கினார். முத்துகிருஷ்ணன் வேலை பார்க்கும் பூங்காவின் எதிரிலேயே, தோட்டக் கலை கல்லூரியும் அமைந்துள்ளது. இதனால், மகளுக்கு பாதுகாப்பாக அங்கே இருந்தார். அடிக்கடி மகளுடன் செல்போனில் பேசி, தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார். சில நேரங்களில் விடுதிக்கு சென்று, அவரை பார்த்து வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கம்போல மாணவிகள், கல்லூரிக்கு புறப்பட்டனர். அப்போது, தனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் கல்லூரிக்கு வரவில்லை என செண்பகா தேவி தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கல்லூரிக்கு சென்ற மாணவிகள், மாலை வகுப்பு முடிந்து விடுதிக்கு திரும்பினர். அங்கு அறையில் உள்ள மின்விசிறியில் செண்பகா தேவி தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மாதவரம் பால்பண்ணை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கல்லூரிக்கு விடுமுறை

அரசு தோட்டக் கலை கல்லூரியின் விடுதியில் 58 மாணவிகள் தங்கி படிக்கின்றனர். மாணவி செண்பகா தேவி திடீரென தூக்குப்போட்டு இறந்ததால், அங்கு வந்த பெற்றோர்  தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். இதனால், கல்லூரிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது.

சாவில் மர்மம்; தந்தை புகார்

முத்துகிருஷ்ணன் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘எனது மகள் செண்பகா தேவி கடந்த சில நாட்களுக்கு முன், என்னிடம் வந்து விடுதியில் உள்ள வார்டன், சக மாணவிகள் முன்னிலையில் தன்னை தரக்குறைவாக பேசி துன்புறுத்தியதாகவும்,  என்னால் அங்கு இருக்க முடியவில்லை என்றும் கூறினாள். அப்போது மகளை சமாதானம் செய்தேன். மகளின் படிப்புக்காக நான், அதை கேட்காமல் இருந்தது தவறாகிவிட்டது. தற்போது எனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறினர்.

என் மகள், தாயை இழந்த பிறகும் தைரியத்துடன் படித்து வந்தாள். அவள் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை இல்லை. என் மகளின் சாவில் மர்மம் இருக்கிறது. இதுபற்றி கல்லூரி நிர்வாகம், விடுதி பெண் வார்டன் ஆகியோரிடம் தீவிரமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என கண் கலங்கியபடி கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: