×

இழுபறியை முடிவுக்கு கொண்டு வந்தார் ராகுல் ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு

புதுடெல்லி: ராஜஸ்தான் முதல்வராக மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், இம்மாநிலத்தில் முதல்வர் பதவிக்கு ஏற்பட்ட மோதலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுமுகமாக முடித்துள்ளார். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கரில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. தேர்தலுக்கு முன்பே, முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், புதிய முதல்வர்களை தேர்வு செய்வதில் கடும் போட்டி ஏற்பட்டு குழப்பம் நிலவியது. மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத், ஜோதிர் ஆதித்யா சிந்தியா ஆகியோர் இடையேயும், ராஜஸ்தானில் மூத்த தலைவர் அசோக் கெலாட், மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் இடையே கடும் போட்டி நிலவியது.

சச்சின் பைலட்டை முதல்வராக அறிவிக்க கோரி ராஜஸ்தானில் அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கினர். அவர்களை அமைதி காக்கும்படி சச்சின் பைலட் வேண்டுகோள் விடுத்தார். தங்களது மாநிலங்களில் புதிய முதல்வர்கள் பெயரை ஆடியோ டிஜிட்டல் முறையில் தெரிவிக்கும்படி 3 மாநிலங்களிலும் உள்ள 7.3 லட்சம் தொண்டர்களுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்தார். மாநில பொறுப்பாளர்கள், முதல்வர் போட்டியில் இருப்பவர்களுடன் ராகுல், சோனியா காந்தி, பிரியங்கா ஆகியோர் நேற்று முன்தினம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து மத்தியப் பிரதேச முதல்வராக கமல்நாத்தை காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் இரவு அறிவித்தது.

சச்சின் பைலட்டை முதல்வராக அறிவிக்க கோரி ராஜஸ்தானில் நேற்று வன்முறை தொடர்ந்தது. ஆனால் அசோக் கெலாட்டை அறிவிக்க வேண்டும் என மூத்த தலைவர்ளும், சோனியா காந்தியும் கூறினர். இதனால் இருதரப்பையும் சமாதானம் செய்ய ராகுல் முடிவு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் காங்கிரஸ் மேற்பார்வையாளர் கே.சி வேணுகோபால் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அசோக் கெலாட்டை ராஜஸ்தான் முதல்வராகவும், சச்சின் பைலட்டை துணை முதல்வராகவும் அறிவித்தார். இதையடுத்து அசோக் கெலாட் அளித்த பேட்டியில், ‘‘ராஜஸ்தான் மக்களுக்கு 3வது முறையாக சேவையாற்ற வாய்ப்பளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி. நானும், சச்சின் பைலட்டும் இணைந்து சிறந்த நிர்வாகத்தை அளிப்போம்’’ என்றார்.  

சச்சின் பைலட் அளித்த பேட்டியில், ‘‘காங்கிரஸ் தேர்தல் வெற்றி தொடரும். அடுத்த மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும்’’ என்றார். வேணுகோபால் அளித்த பேட்டியில், ‘‘ராஜஸ்தான் ஆளுநரை நாங்கள் சந்தித்து பேசி, எப்போது பதவி ஏற்பது என முடிவு செய்வோம்’’ என்றார்.

மந்திரவாதியின் மகன்
அசோக் கெலாட்டின் தந்தை லட்சுமன் சிங் கெலாட் மந்திரவாதி. பல இடங்களுக்கு சென்று வித்தை காட்டுவார். அப்போது அசோக் கெலாட் அவருக்கு உதவியாளராக இருந்தார். கடந்த 2015ம் ஆண்டு நடந்த மந்திரவாதி
கள் மாநாட்டுக்கு இவர் தலைமை தாங்கியபோது, இவரே ஒரு மாயவித்தையை செய்து பார்வையாளர்களை அசத்தினார். மந்திரம் தனது ஆன்மாவில் உள்ளதாக அவர் கூறுவார். அரசியலில் சேராமல் இருந்திருந்தால், தானும் மந்திரவாதி தொழிலில்தான் ஈடுபட்டிருப்பேன் என அவர் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் தேசிய மாணவர் அணிக்கு இவர் கடந்த 1974ல் தலைமை தாங்கியபோது தனது அணியினருடன் கிழக்கு வங்கத்தில் உள்ள அகதிகளுக்கு இவர் சேவை செய்தார். இவரது பணி மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை கவர்ந்தது. அப்போது முதல் இவர் இந்திரா காந்தி குடும்பத்தின் தீவிர விசுவாசியாக பார்க்கப்பட்டார்.

ஏற்கனவே 2 முறை போட்டியை சந்தித்து வென்றவர்
ராஜஸ்தானில் கடந்த 1998ம் ஆண்டு மற்றும் 2008ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற போதும் முதல்வர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அப்போதும் தனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாட் தலைவர்களை தோற்கடித்து வெற்றி முதல்வரானார் அசோக் கெலாட். இவர் மாலி இனத்தை சேர்ந்தவர். ஜாட் இனத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் சிஸ் ராம் ஓலாவை முதல்வராக தேர்வு செய்யும்படி கடந்த 2008ம் ஆண்டு நெருக்கடி கொடுக்கப்பட்டது. இரு தரப்பினரும் கடுமையாக மோதிக் கொண்டனர்.

ஆனால் கட்சியின் மூத்த தலைவர்கள் பரிந்துரை செய்ததால், அப்போது அசோக் கெலாட்டை முதல்வராக சோனியா அறிவித்தார். ஆனால் இந்த முறை மாநில காங்கிரஸ் தலைவரையே போட்டியில் எதிர்கொள்ள நேரிட்டது. இதிலும் மூத்த தலைவர்கள் மற்றும் சோனியா ஆதரவுடன் 3வது முறையாக முதல்வராகியுள்ளார் அசோக் கெலாட்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ashok Gehlot ,Chief Minister ,Rajasthan , Rahul, Rajasthan, Chief Minister, Ashok Gehlot
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...