×

ஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை: கேரளாவில் முழு அடைப்பு

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில்  பாஜ உண்ணாவிரத பந்தல் அருகே ஐயப்ப பக்தர் தீ குளித்து தற்கொலை செய்ததை  தொடர்ந்து கேரளாவில் நேற்று பாஜ சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. சபரிமலையில்    144 தடை உத்தரவு மற்றும் போலீஸ் கெடுபிடிகளை நீக்கக்கோரி பாஜ சார்பில்  திருவனந்தபுரத்தில் தலைமை செயலகம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்    நடந்து வருகிறது. கடந்த 3ம் தேதி பாஜ பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன்    காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.   அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக பாஜ தலைவர் பத்மநாபன்  உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.  நேற்று முன்தினம்  3வது நாளாக உண்ணாவிரதம்  இருந்தார்.

அன்று  அதிகாலை 1.30 மணியளவில் திருவனந்தபுரம் முட்டடை  பகுதியை  சேர்ந்த வேணுகோபாலன்  நாயர் (49) என்பவர் பந்தலின் அருகில் உடலில் பெட்ரோலை  ஊற்றி தீக்குளித்து இறந்தார். இதையடுத்து, கேரளாவில் நேற்று முழு அடைப்பு  போராட்டத்திற்கு பாஜ அழைப்பு  விடுத்தது. இந்த பந்துக்கு ஐயப்ப  கர்ம சமிதியும் ஆதரவு  தெரிவித்தது. இதையடுத்து, ேநற்று கேரளா முழுவதும்  கடைகள் மற்றும் வர்த்தக  நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் இயக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள்,   பல்கலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. தேர்வுகள்  தள்ளி வைக்கப்பட்டன. இந்த திடீர் போராட்டத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.  

பாலக்காட்டில் 3 அரசு பஸ்கள் மர்ம கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டன. வெளியூர்களில்  இருந்து ரயிலில் வந்தவர்கள் வீடு செல்ல முடியாமல்   அவதிப்பட்டனர். கேரளாவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்கள்  நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டன. திருவனந்தபுரம் செல்லும் செல்லும் பஸ்கள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டன.

நீட்டுக்கு தடையில்லை
திருவனந்தபுரத்தில் 3 மையங் களில் நேற்று நீட் தேர்வு நடந்தது. தேர்வு எழுதும் மணவர்களுக்கு பாஜ.வே வாகன வசதி செய்து கொடுத்தது. இதனால், நீட்  தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த சிக்கலும் இல்லை.

மோகன்லால் படம் ரிலீஸ்
நடிகர்   மோகன்லால்  நடித்த ‘ஒடியன்’ படத்தை நேற்று ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. போராட்டம் காரணமாக ரிலீஸ் நடக்குமா என    சந்தேகம் எழுந்தது. ஆனால், படத்தை  வெளியிட பாஜ  அனுமதித்தது.

சபரிமலைக்கு விலக்கு இந்த முழு அடைப்பு போராட்டத்தில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு விலக்கு  அளிக்கப்பட்டது. இதனால், அவர்கள் தடையின்றி சபரிமலை  சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ayyappa ,suicide ,Kerala , Ayyappa devotee, burning suicide, Kerala, full shutters
× RELATED காதல் உறவுகளை சொல்லும் உப்பு புளி காரம்