×

ஒரு முறை கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதால் விஜய் மல்லையாவை திருடன் என கூறாதீர்கள்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வக்காலத்து

மும்பை: ‘‘வாங்கிய கடனை ஒரேயொரு முறை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக ‘விஜய் மல்லையாஜி’யை திருடன் எனக் கூறக்கூடாது’’ என்று மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார். இந்திய வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி விட்டு திருப்பி செலுத்தாமல் விஜய் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றார். மத்திய அரசு மேற்கொண்ட தீவிர முயற்சி காரணமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த கடந்த வாரம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, விரைவில் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட உள்ளார். இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற பொருளாதார கருத்தரங்கம் ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது;

விஜய் மல்லையா பல தொழில்களை செய்து வந்தவர். 40 ஆண்டுகளாக அவர் முறையாக வரி செலுத்தி வந்திருக்கிறார். தனது தொழிலுக்காக வாங்கிய கடன் தொகைக்கான வட்டியையும் அவர் 40 ஆண்டுகளாக முறையாக செலுத்தி வந்திருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு பின்னர் விமான போக்குவரத்து துறையில் அவர் அடியெடுத்து வைத்த பிறகுதான் அவருக்கு கெட்ட காலம் பிறந்தது. விமான போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக பொருளாதார சிக்கலில் சிக்கிய அவரால் வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. 40 ஆண்டுகால முறையாக வரியும், கடனுக்கான வட்டியையும் செலுத்தி வந்த விஜய் மல்லையாஜியை திடீரென ஒரு நாள் திருடன் என்றும் மோசடிக்காரர் என்றும் கூறுவது சரியல்ல. மக்களின் இந்த மனோபாவம் சரியானது அல்ல.

நான் இப்படி பேசுவதால் அவருக்கு ஆதரவானவன் எனக் கருதிவிட வேண்டாம். தொழில் ரீதியாக எனக்கும் அவருக்கு எந்தவித சம்பந்தமும் கிடையாது. வங்கித் துறையானாலும், இன்சூரன்ஸ் துறையானாலும் எந்த தொழிலிலும் சிரமங்களும் ஏற்றத்தாழ்வுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  உலகளவில் பொருளாதார நெருக்கடி காரணமாக உள்நாட்டு தொழில்களுக்கும் நெருக்கடி ஏற்படுவது வழக்கம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் நமது இந்திய தொழில் முனைவோருக்கு தோள் கொடுத்து உதவ வேண்டும். தேர்தலை போலவே சில சமயங்களில் தொழிலிலும் தோல்வியை சந்திக்க நேரிடும்.

நான் எனது 26வது வயதிலேயே தேர்தலில் தோல்வியடைந்தேன். அந்த தோல்வியுடன் எனது அரசியல் வாழ்க்கை முடிந்து விடவில்லை. நீரவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்கள் பொருளாதார மோசடியில் ஈடுபட்டார்கள் என்றால் சட்டரீதியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கலாம். ஆனால், தொழிலில் சிரமங்களை சந்திப்பவர்களை எல்லாம் மோசடி பேர்வழிகள் என நாம் முத்திரை குத்துவோம் என்றால் நமது நாட்டு பொருளாதாரம் முன்னேற்றம் அடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vijay Mallya ,Nitin Gadkari , Vijay Mallya, Thief, Union Minister Nitin Gadkari
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...