அதிபர் சிறிசேனா அறிவிப்பு: இலங்கைக்கு நாளை புதிய பிரதமர் தேர்வு: ரணிலை நியமிக்க முடியாது என பிடிவாதம்

கொழும்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து, இலங்கையின் புதிய பிரதமரை அதிபர் சிறிசேனா நாளை நியமிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே சமயம், ரணில் விக்ரமசிங்கேவுக்கு மீண்டும் பதவி கொடுப்பதில்லை என்பதில் அவர் திட்டவட்டமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிய அதிபர் மைத்ரி பால சிறிசேனா, புதிய பிரதமராக மகிந்தா ராஜபக்சேவை கடந்த அக்டோபர் 26ம் தேதி நியமித்தார். அதிபர் சிறிசேனாவின் இந்த உத்தரவை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இதனால், சிறிசேனாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது.

இந்நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் சிறப்பு கூட்டம் கொழும்பில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், மகிந்தா ராஜபக்சேவும் கலந்து கொண்டார். இக்கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதே நேரத்தில் ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்க விடப்போவதில்லை எனவும் சிறிசேனா கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி, நாட்டை சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காகவே நாடாளுமன்றத்தை கலைத்ததாகவும் சிறிசேனா கூறி உள்ளார்.

மேலும், ரணில் கட்சியின் அதிருப்தி எம்பி.க்களை தங்கள் பக்கம் இழுக்க வேண்டுமெனவும், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து அரசு அமைப்பதை சுதந்திர கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் முன்மொழியக் கூடாது எனவும் சிறிசேனா கேட்டுக் கொண்டார்.  பிரதமராக ராஜபக்சேவும், அவரது 49 அமைச்சர்களும் செயல்பட விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை எதிர்த்து ராஜபக்சே மேல்முறையீடு செய்துள்ளார். இதில் தீர்ப்பு வெளியானதும், புதிய பிரதமரை தேர்வு செய்ய இருப்பதாகவும் சிறிசேனா கூறியதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவர், புதிய பிரதமரின் பெயரை நாளை வெளியிடுவார் என தெரிகிறது.

ராஜபக்சே இன்று ராஜினாமா

ராஜபக்சே இன்று தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்கிறார் என அவரது மகன் நமல் டிவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் கூறியுள்ளார். அதில், ‘‘இலங்கையில் அரசியல் நிலைத்தன்மையை உறுதி செய்ய பிரதமர் பதவியை இன்று ராஜினாமா செய்ய ராஜபக்சே முடிவு செய்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றியபின் அவர் ராஜினாமா செய்வார்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: