மியான்மரில் ரோஹிங்கியாவுக்கு எதிராக நடந்தது இனப் படுகொலை: அமெரிக்க எம்பி.க்கள் தீர்மானம்

வாஷிங்டன்: மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இனப்படுகொலை’’ என அமெரிக்க எம்.பி.க்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மியான்மர் நாட்டின் வடக்கு ராகினி மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கும், புத்தமதத்தினருக்கும் இடையே கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் மோதல் நடந்தது.  பின்னர், இது ரோஹிங்கியா முஸ்லிம்கள் - பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலாக மாறியது. ரோஹிங்கியா மக்கள் அடித்து விரட்டப்பட்டனர். 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இவர்கள் வங்கதேசத்தில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பதால், மீண்டும் வங்கதேசத்துக்கு அகதிகளாக சென்றனர். தற்போது வங்கதேசத்தில் ரோஹிங்கியா அகதிகள் எண்ணிக்கை 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த மக்கள் இந்தியாவிலும் அகதிகளாக உள்ளனர். இவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அரசு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், இந்த வன்முறையை இனப் படுகொலை என குறிப்பிட மியான்மர் அரசு தவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதனால், மியான்மருக்கு அமெரிக்கா அரசு தடை விதிக்கவும், அழுத்தம் கொடுக்கும் வகையில், மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் இனப்படுகொலை என அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 394 பேரும் எதிராக ஒருவரும் வாக்களித்தனர். இதனால், இந்த தீர்மானம் நிறைவேறியது. இது குறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளியுறவுத்துறை குழு தலைவர் எட் ராய்ஸ் கூறுகையில், ‘‘ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை இனப்படுகொலை என அழைக்க அமெரிக்காவுக்கு தார்மீக கடமை உள்ளது. இதை செய்ய தவறினால், இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் நீதி முன் நிறுத்தப்படாமல் தப்பி விடுவார்கள். மியான்மருக்கு பொருளாதார தடை மட்டும் அல்லாமல், அதிக அழுத்தத்தை அமெரிக்க அரசு கொடுக்க வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: