பிரெக்சிட் விவகாரம்: இங்கிலாந்துக்கு சலுகை வழங்க ஐரோப்பிய கூட்டமைப்பு மறுப்பு: ஒப்பந்தமின்றி வெளியேற்ற 27 நாடுகள் முடிவு

பிரஸ்சல்ஸ்: இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற, ஐரோப்பிய யூனியனிடம் பிரதமர் தெரசா மே சில சலுகைகளை கேட்கிறார். ஆனால், எந்த ஒப்பந்தமும் இல்லாமல் இங்கிலாந்து வெளியேறுவதற்கான நடவடிக்கையை ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தொடங்கியுள்ளனர்.  ஐரோப்பிய யூனியனில் இருந்து விலக இங்கிலாந்து முடிவு செய்தது. இதுதொடர்பாக அந்நாட்டில் 2016ம் ஆண்டு நடந்த பொதுவாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு (பிரெக்சிட்) ஆதரவாக ஏராளமானவர்கள் வாக்களித்தனர். அடுத்த மாதம் 29ம் தேதி  ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேற பிரதமர் தெரசா மே தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.  

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிவதற்கு முன்பாக, அதனுடனான விசா குடியுரிமை தொடர்பாக இரு தரப்பினரும் செய்து கொள்ள வேண்டிய எதிர்கால உடன்படிக்கையை தெரசா மே தயாரித்து வந்தார். இந்த ஒப்பந்தத்தில் வடக்கு அயர்லாந்து முக்கிய பிரச்னையாக உள்ளது. அயர்லாந்து குடியரசில் உள்ள 32 மாவட்டங்களில் 26 மாவட்டங்கள் இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் பெற்று விட்டன. 6 மாவட்டங்கள் இன்னும் இங்கிலாந்தின் ஒரு பகுதியாகவே உள்ளன.

இதனால், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்செல்ஸ் நகரில் நேற்று நடந்த ஐரோப்பிய யூனியன் கூட்டத்தில் தெரசா மே கலந்து கொண்டு, ‘‘அயர்லாந்து விஷயத்தில் மட்டும் இங்கிலாந்துக்கு எந்த தடையும் இருக்கக் கூடாது, அப்போதுதான் என்னால் பிரெக்சிட் ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும்’’ என வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் தயாராக இல்லை. எந்த சலுகை ஒப்பந்தமும் இல்லாமல் இங்கிலாந்தை விலக்க, ஐரோப்பிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 27 நாட்டு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ஐரோப்பிய யூனியன் கமிஷன் தலைவர் ஜேன்-கிளாட் ஜங்கர் கூறுகையில், ‘‘எந்த ஒப்பந்தமும் இல்லாமல் ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான அறிக்கையை வரும் 19ம் தேதி நாங்கள் வெளியிடுவோம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: