×

சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் வழங்குகிறது - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு

கோவை: காட்டு யானைகள், விளை பொருட்களை சேதம் செய்வதால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என்றும், சிங்கம் தாக்கி உயிரிழப்பவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்குகிறது என்றும் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உளறி கொட்டி உள்ளார்.கோவை வனக்கல்லூரியில் மாநில வனத்துறை விளையாட்டு போட்டி தொடக்க விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விளையாட்டு போட்டிகளை தொடங்–்கி வைத்து பேசியதாவது: கோவையில் கும்கி யானைகளுக்கு காட்டு யானைகள் `டிமிக்கி’ கொடுத்து தப்பி விடுவதால் அவற்றை பிடிக்க முடியவில்லை. அதேபோல், விவசாயிகளுக்கு காட்டு யானைகள் `டிமிக்கி’ கொடுத்துவிட்டு, விளை பொருட்களை சேதம் செய்துவிடுவதால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்கம், புலி தாக்கி உயிரிழப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. யாரும் சிங்கம், புலி தாக்கி வேண்டுமென்றே உயிரிழப்பதில்லை.  இவ்வாறு சீனிவாசன் பேசினார்.

காட்டு யானைகளால்தான் விளை பயிர்கள் சேதமடைகிறது. யானை தாக்குவதால் மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. ஆனால், சிங்கம் தாக்கி இறப்பவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்குவதாக வனத்துறை அமைச்சரே பேசியது, விவசாயிகளை அதிருப்தி அடைய செய்தது. அமைச்சர், எம்.எல்.ஏ. சிபாரிசு: விழா முடிந்தவுடன் நிருபர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் கூறும்போது, `வனத்துறையில், புதிதாக 300 வனவர்கள், 726 வனக்காப்பாளர்கள் மற்றும் 152 ஓட்டுனர்  உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர்கள் என மொத்தம் 1,178 பணியிடங்களுக்கு  தேர்வு நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிகளை பெற  அமைச்சர், எம்.எல்.ஏ., அதிகாரிகள் சிபாரிசு தேவையில்லை. தகுதி அடிப்படையில் மட்டும் தேர்வு செய்யப்பட உள்ளனர்’ என்றார்.

தமிழக வனப்பகுதிகளில் ஒரு சிங்கம் கூட இல்லை
குஜராத் மாநில வனப்பகுதியில் மட்டும்தான் இந்தியாவில் சிங்கங்கள் வாழ்கின்றன. இதற்காக அங்கு அமைக்கப்பட்டுள்ள கிர் தேசிய பூங்காவில் சுமார் 500 சிங்கங்கள் இருப்பதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன. இதுதவிர இந்தியாவின் ேவறு எந்த மாநிலத்தில் உள்ள வனப்பகுதியிலும் சிங்கங்கள் இல்லை. உயிரியல் பூங்காக்களில் வேண்டுமானால் சிங்கம் ஒன்றிரண்டு இருக்கும். தமிழக வனங்–்களில் ஒரு சிங்கம் கூட இல்லாத நிலையில் சிங்கம் தாக்கி உயிரிழந்தால் அரசு நிவாரணம் தருகிறது என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Dindigul Srinivasan ,speech , Wild elephants, fruits products, minister Dindigul Srinivasan, controversial speech
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...