×

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலை முயற்சி

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே அரசு பள்ளி மாணவிகள் 5 பேர் தற்கொலைக்கு முயன்றனர்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டு கிராமத்தில் அரசு மலைவாழ் உண்டு உறைவிட நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 172 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 7ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இடைவேளையில் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. மாணவியை தலைமையாசிரியர் வீரன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, முதல் உதவி சிகிச்சை அளித்துவிட்டு அழைத்து வந்தார்.ஆனால், மாணவிக்கு மீண்டும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. உடனே, சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அப்போது மேலும் 4 மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததாக தலைமை ஆசிரியருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் 4 பேரையும் மீட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவே அனைவருக்கும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் பள்ளிக்கு சென்று சக மாணவர்கள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், `மாணவிகளை மற்ற மாணவர்களுடன் தொடர்புபடுத்தி கரும்பலகையில் சிலர் எழுதி உள்ளனர். இதனை பள்ளிக்கு வந்த மாணவிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால், இடைவேளையில் எலி மருந்து சாப்பிட்டுள்ளனர்’ என்று தெரியவந்தது. இதனிடையே, தனி வட்டாட்சியர் விஜயபிரபாகரன், சங்கராபுரம் வருவாய் ஆய்வாளர் தேவதாஸ் ஆகியோர் கொண்ட குழு பள்ளிக்கு சென்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suicide attempts ,Sankarapuram , மாணவிகள் , தற்கொலை முயற்சி,சங்கராபுரம்
× RELATED சங்கராபுரம் ஊராட்சியில் அரசுப் பள்ளியில் ஆண்டு விழா