நெல்லையப்பர் கோயிலில் நள்ளிரவில் சிலை பாதுகாப்பு மையத்தில் போலீசுடன் தங்கிய மர்ம நபர் குறித்து விசாரணை

நெல்லை: நெல்லையப்பர் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் போலீஸ்காரருடன் இரவில் மர்ம நபர் ஒருவர் இருந்தது குறித்து அறநிலையத்துறை மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசித்தி பெற்ற நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் சிலைகள் பாதுகாப்பு மையம் அமைந்துள்ளது. இந்த மையத்தில் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கியமான கோயில்களுக்குரிய பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் வைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். இரவு நேரத்தில் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் ஒரு போலீசாரும், கோயில் பாதுகாப்பாளர்கள் 4 பேரும் பாதுகாப்பு பணியில் இருப்பர்.

கடந்த 13ம் தேதி வழக்கம் போல் இரவு போலீசும், பாதுகாவலர்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். சிலைகள் பாதுகாப்பு மையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து நள்ளிரவில் கற்களை வீசி எறிந்தது போன்ற சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் பாதுகாப்பாளர்கள் சிலை பாதுகாப்பு மையத்திற்கு விரைந்து சென்றனர்.

அப்போது அங்கு போலீஸ் அல்லாத மர்ம நபர் ஒருவர் இருந்துள்ளார். பணியில் இருந்த போலீஸ்காரரிடம் மர்ம நபர் குறித்து அவர்கள் கேட்டபோது, மர்மநபரை தனது உறவினர் எனவும் தன்னை சந்திக்க வந்ததாகவும் அவர் கூறியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து பாதுகாவலர்கள் கோயில் நிர்வாகத்திற்கும், அறநிலையத்துறை உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பல கோடி மதிப்புடைய சிலைகள் வைத்து பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் அத்துமீறி கோயிலினுள் வந்தது எப்படி என்று அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: