பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு இந்தியா வெளியிட்ட ரூ.200,500,2000 நோட்டுகளுக்கு நேபாளம் தடை

காத்மண்டு: பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட புதிய ரூ.500, ரூ.2,000, ரூ.200 நோட்டுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது.கருப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டு செல்லாது என, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து இவற்றை வங்கிகளில் மாற்ற அவகாசம் அளிக்கப்பட்டது. நேபாளத்திலும் இந்திய கரன்சி புழக்கத்தில் உள்ளது. எனவே, நேபாள மக்கள் இவற்றை மாற்றுவதற்கு அதிகபட்ச அவகாசம் தரப்பட்டது.மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட நோட்டுக்கு பதிலாக புதிதாக ₹500, ₹2,000 மற்றும் ₹200 நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. பின்னர், நீண்ட மாதங்களுக்கு பிறகு பணப்புழக்கம் சகஜ நிலைக்கு திரும்பியது. நேபாளத்திலும் இந்த நோட்டு புழக்கத்தில் உள்ளன. இந்திய எல்லை பகுதி மாநிலங்களில் நேபாள மக்கள் வேலை செய்கின்றனர். இவர்கள் இந்திய கரன்சிகளையே பரிவர்த்தனை செய்கின்றனர்.

 புதிய ரூபாய் நோட்டு வெளியிடப்பட்ட பிறகு உயர் மதிப்பிலான ₹2,000, ₹500, ₹200 நோட்டு மீண்டும் மதிப்பு நீக்கம் செய்யப்படலாம் என தகவல் பரவியது. ஆனால், இப்படி ஒரு திட்டம் அரசிடம் இல்லை என மத்திய அரசு உறுதிப்படுத்தியது. இந்த சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக வெளியிட்டவற்றில் உயர் மதிப்பிலான ₹500, ₹2,000 நோட்டு குறித்து மிக முக்கிய அறிவிப்பை நேபாள அரசு வெளியிட்டுள்ளது.இதுகுறித்து காத்மாண்டு போஸ்ட் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நேபாளத்தில் இந்திய அரசின் ₹500, ₹2,000 நோட்டை மக்கள் பயன்படுத்துகின்றனர். இனி ₹100க்கு மேல் உள்ள மதிப்பிலான இந்திய கரன்சிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம். இவற்றை வைத்திருக்கவும் வேண்டாம். நேபாள அரசு இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என நேபாள நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் கோகுல் பிரசாத் பாஸ்கோடா கூறியதாக தெரிவித்துள்ளது.

நேபாள மக்கள் பரிவர்த்தனைக்கு மட்டுமின்றி எதிர்கால தேவைக்கும் இந்திய கரன்சிகளை சேமித்து வைக்கின்றனர். இதுபோல் இந்தியா வரும் நேபாள சுற்றுலா  பயணிகள், நேபாளத்துக்கு சுற்றுலா ெசல்லும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினர் இந்திய கரன்சிகளை அங்கு புழக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர். இந்த சூழ்நிலையில் நேபாள அமைச்சரின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இந்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் நேபாள மக்கள் கடும் பாதிப்பு அடைந்துள்ளதாக, நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். நேபாள மக்கள் வைத்திருந்த இந்திய கரன்சிகள் நேபாள ரிசர்வ் வங்கி மூலம் இந்திய ரிசர்வ் வங்கி முழுமையாக பெற்றுக்கொள்ளவில்லை எனவும், இதனாலேயே இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: