×

ரபேல் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் : நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு பாஜ பதிலடி

புதுடெல்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, ராகுல் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி,  நாடாளுமன்றத்தில்  பாஜ எம்பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின.ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பல கோடி முறைகேடு நடத்திருப்பதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதில் பிரதமர் மோடி நேரடியாக சம்மந்தப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். நாடாளுமன்றத்திலும் ரபேல் விவகாரம் தொடர்பாக காரசார விவாதங்கள் நடந்தன. இதற்கிடையே, ரபேல் விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘எந்த முறைகேடும் நடந்ததற்கான முகாந்திரம் இல்லை’ என நேற்று தீர்ப்பளித்தது.

மத்திய அரசுக்கு சாதகமான இந்த தீர்ப்பால் பாஜ தலைவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இதன் எதிரொலியாக, நாடாளுமன்றத்தில் நேற்று ரபேல் விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. மக்களவையில்,  கேள்வி நேரம் தொடங்கியதும், ரபேல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி காங்கிரஸ் எம்பிக்கள் கோஷமிட்டனர். பதிலுக்கு பாஜ எம்பிக்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி பதிலடி கொடுத்தனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘‘உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என கோஷமிட்டார். காங்கிரஸ் எம்பி.க்களும் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். இதன் காரணமாக 40 நிமிடம் அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை மீண்டும் கூடியதும், ரபேல் விவகாரத்தில் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டுமென மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.அவர் கூறுகையில், ‘‘ராகுலின் தவறான குற்றச்சாட்டு, சர்வதேச நாடுகள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைத்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக ராகுல் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். ’’ என்றார். இதற்கு காங்கிரசார் எதிர்கோஷம் போட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், மாநிலங்களவையிலும் அமளிகள் அரங்கேறின. அவைத் தலைவரும், நிதி அமைச்சருமான அருண் ஜெட்லி, ‘‘ரபேல் போர் விமானம் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இதனால் கேள்வி நேரத்தை ஒத்திவைக்க வேண்டும்’’ என்றார். ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை கோரி காங்கிரஸ் எம்பிக்கள் அவையின் மையப்பகுதியை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். காங்கிரசார் ‘காவலாளி (மோடி) ஒரு திருடன்’ என்றும் கோஷமிட, பதிலுக்கு பாஜவினர் ‘ராகுல் ஒரு பொய்யர்’ என கோஷமிட்டனர். இதனால்  அவை, பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை தொடங்கிய குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாள் வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்து ஒத்திவைக்கப்பட்ட பிறகு, அதற்கு அடுத்த 3 நாளும் முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்கு சவால்
காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘ரபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் தீர்வு காண முடியாது என ஏற்கனவே நாங்கள் கூறிவிட்டோம். நான் மீண்டும் ஒருமுறை பிரதமர் மோடிக்கு சவால் விடுகிறேன். அவர்கள் எதையும் மறைக்கவில்லை என்றால், நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும்.
அந்த விசாரணை நடக்கும் பட்சத்தில், ரபேல் ஒப்பந்தத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் செய்த ஊழல்கள் அம்பலமாகும். இந்த ஊழல், உச்சக்கட்ட அதிகார சக்திகளின் வழிகாட்டுதலில் நடந்துள்ளது’’ என்றார்.

சிறப்பான தீர்ப்பு
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கூறுகையில், ‘‘ரபேல் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகச் சிறப்பானது. மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முழுவதும் நிராகரிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.

வாய்மையே வெல்லும்
கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தனது டிவிட்டர் பதிவில், ‘வாய்மையே வெல்லும்’ என்பதை பதிவிட்டு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றார். பாரிக்கர் மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த போதுதான், ரபேல் ஒப்பந்தம் முடிவானது குறிப்பிடத்தக்கது.

‘உண்மையே ஜெயிக்கும்’
உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தனது டிவிட்டர் பதிவில், ‘உண்மை எப்போதும் ஜெயிக்கும்! இதுவரை, அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் தலைவர் தவறான தகவலை பரப்பி பிரசாரம் செய்திருப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் வெளிப்பட்டிருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

பதாகையுடன் வந்த அதிமுக எம்பிக்கள்
ரபேல் விவகாரத்தில் பாஜ, காங்கிரஸ் இடையே கடும் அமளி நடந்த நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்பி.க்களும், உபி புலந்த்சாகர் வன்முறை தொடர்பாக சமாஜ்வாடி எம்பி.க்களும் கோஷமிட்டனர். இதனால் இரு அவையிலும் வழக்கத்துக்கு மீறிய கூச்சல் குழப்பம் நிலவியது. மேகதாது அணை கட்டும் உத்தரவை ரத்து செய்யக் கோரி எழுதப்பட்ட பதாகைகளுடன் அதிமுக எம்பிக்கள் அவைக்கு வந்திருந்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul ,Rafael ,BJP ,Congress ,Parliament , Rafael fighter aircraft deal, Rahul, Bhaj Prasad
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை...